இந்தியா

மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்.. இது நாங்கள் அளிக்கும் உறுதி - தலைமை நீதிபதி

Published On 2024-08-22 08:01 GMT   |   Update On 2024-08-22 09:32 GMT
  • தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் அமர்வில் இந்த வழக்கானது மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
  • உச்சநீதிமன்றம் அமைத்துள்ள 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழு மருத்துவர்களின் கோரிக்கைகளைக் கண்டிப்பாகக் கேட்டறியும்

கொல்கத்தாவில் R G கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பூதாகரமாக மாறியுள்ள நிலையில் மருத்துவர்கள் போராட்டம், சிபிஐ விசாரணை என தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. முதல் நாள் விசாரணையில் மேற்கு வங்காள அரசையும், போலீசையும் உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. தாமதமாக வழக்குப் பதிந்தது ஏன்? மருத்துவமனைக்குள் கலவரக்காரர்கள் எப்படி நுழைந்தனர்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியது.

மேலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களிடம் அரசு தங்களின் பலத்தைக் காட்ட வேண்டாம் என்று கூறியிருந்தது. ஆனால் மக்களின் நலன் கருதி மருத்துவர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டு வேலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில் தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கானது மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.

மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும் வேலைக்குத் திரும்ப வேண்டும். போராட்டம் நடத்திய ரெசிடெண்ட் மருத்துவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதை இந்த நீதிமன்றம் உறுதி செய்யும் என்று தலைமை நீதிபதி டி,ஒய்.சந்திரசூட் வாக்குறுதி அளித்தார். மேலும், உச்சநீதிமன்றம் அமைத்துள்ள 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழு மருத்துவர்களின் கோரிக்கைகளைக் கண்டிப்பாகக் கேட்டறியும் என்றும் அவர் உறுதியளித்தார். 

 

Tags:    

Similar News