இந்தியா

இந்தியாவில் முதல் முறையாக ஒரே நேரத்தில் போர் கப்பலுக்கு கமாண்டராக இருக்கும் தங்கை, அண்ணன்

Published On 2024-11-15 05:40 GMT   |   Update On 2024-11-15 05:40 GMT
  • போக்குவரத்து, மருத்துவ பிரிவு உள்ளிட்டவற்றில் மட்டுமே பெண்கள் பணியாற்றி வந்தனர்.
  • அக்னிவீரர் திட்டத்தின் கீழ் கடற்படையில் தற்போது 1,000 பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

புதுடெல்லி:

இந்திய கடற்படை வரலாற்றில் முதல்முறையாக, பெண் அதிகாரி ஒருவர் போர் கப்பலின் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரும், இவரது சகோதரரும் ஒரே நேரத்தில் இருவேறு போர் கப்பல்களின் கமாண்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்திய முப்படைகளில், பெண்கள் அதிகாரிகளாக பணி நியமனம் செய்யப்படும் நடைமுறை 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

போக்குவரத்து, மருத்துவ பிரிவு உள்ளிட்டவற்றில் மட்டுமே பெண்கள் பணியாற்றி வந்தனர். அதிகாரிகள் பதவிக்கு பெண்களை முதல்முறையாக நியமனம் செய்த பெருமை, நம் கடற்படையை சேரும்.

அக்னிவீரர் திட்டத்தின் கீழ் கடற்படையில் தற்போது 1,000 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். கடற்படையின் போர் கப்பல்களில், 4 பெண் அதிகாரிகள் கடந்த 2021-ல் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

இதை தொடர்ந்து 40 பெண் அதிகாரிகள் தற்போது பணியில் உள்ளனர். ஆனால் போர் கப்பலுக்கு தலைமை வகிக்கும் கமாண்டர் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டதில்லை.

இதனை மும்பையை சேர்ந்த பிரேர்னா தியோஸ்தலி என்ற பெண் முறியடித்து முதல்முறையாக பெண் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2009-ம் ஆண்டில் இந்திய கடற்படையில் பணியமர்த்தப்பட்டார்.

ஐ.என்.எஸ் சென்னை போர் கப்பலின் முதல் லெப்படினன்டாகவும் இருந்தவர்.

கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்., டிரிங்கட் போர் கப்பலின் முதல் பெண் கமாண்டராக அவர் நியமிக்கப்பட்டார். கடற்படையில் கடந்த 2000-ம் ஆண்டில் இணைந்த ஐ.என்.எஸ்., டிரிங்கட், 50 வீரர்களை கொண்டது. அந்தமான் நிகோபாரில் உள்ள ஒரு தீவின் நினைவாக கப்பலுக்கு இந்த பெயர் சூட்டப்பட்டது.

கனரக இயந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட இந்த கப்பல், நிலப்பரப்பு தாக்குதல்களை எதிர்க்கும் திறன் உடையது. அதிவேகத்திலும், ஆழம் குறைவான பகுதிகளிலும் இயங்கும் திறன் உடையது. இந்த கப்பலின் கமாண்டராக பிரேர்னாவின் தியோஸ்தலி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது சகோதரர் இஷான் தியோஸ்தலியும், கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவர், ஐ.என்.எஸ்., விபூதி போர் கப்பலின் கமாண்டராக நியமிக்கப்பட்டார்.

ஐ.என்.எஸ். விபூதி அரபிக் கடலில் கோவா கடற்கரையோரம் ஜனாதிபதி முர்மு பங்கேற்ற விழாவில் இந்த கப்பலும் பங்கேற்றது கூறிப்பிடத்தக்கது.

சகோதரனும், சகோதரியும் ஒரே நேரத்தில் கடற்படை போர் கப்பல்களின் கமாண்டர்களாக பணியாற்றுவது இதுவே முதல்முறை.

Tags:    

Similar News