ஜார்க்கண்ட் தேர்தல் - டயருக்குள் பதுக்கி கடத்தப்பட்ட ரூ.50 லட்சம் பறிமுதல்
- ஊழலையும், பணக்கட்டுகளையும் பார்க்க வேண்டுமானால் ஜார்க்கண்டுக்கு வாருங்கள்.
- டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா கட்சி ஆட்சி நடந்து வருகிறது.
இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 13-ந்தேதி 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
மீதம் உள்ள 38 தொகுதிகளுக்கு வருகிற 20-ந்தேதி 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜார்க்கண்ட்- பீகார் எல்லையில் உள்ள கிரிதிஹ் மாவட்டத்தில் வருமான வரித்துறையினரும், போலீசாரும் சேர்த்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் உதிரியாக ஒரு டயர் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த டயரை சோதனை செய்தபோது டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பண கட்டுகளை டயருக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்ட அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பணம் எதற்காக மறைத்து வைத்து கடத்தி செல்லப்படுகிறது? வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்டதா? என விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் டயருக்குள் பதுக்கி பணம் கொண்டு செல்லப்பட்டதை அதிகாரிகள் கைப்பற்றிய வீடியோவை ஜார்க்கண்டில் கோடா தொகுதி பாஜக எம்.பி. நிசிகாந்த் துபே எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
வீடியோவுடன் அவரது பதிவில், ஆளும் ஜார்க்கண்ட் முக்திமோச்சா மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சேர்ந்து மாநிலத்தில் ஊழல் செய்கின்றனர் என பதிவிட்டுள்ளார்.
மேலும் ஊழலையும், பணக்கட்டுகளையும் பார்க்க வேண்டுமானால் ஜார்க்கண்டுக்கு வாருங்கள். வருமானவரித்துறையும், தேர்தல் அதிகாரிகளும் கிரிதிக் தொகுதியில் ரூ.50 லட்சம் பணத்தை கைப்பற்றி உள்ளனர் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தளங்களில் வைரலாகி வருகிறது.