தண்ணீரில் இயங்கும் ஹைட்ரஜன் ரெயில் விரைவில் அறிமுகம்: ஊட்டியில் இயக்க பரிசீலனை
திருப்பதி:
நீராவியில் இயங்கும் ரெயில்கள் என்று கேள்விப்பட்டோம். நிலக்கரியில் இயங்கும் ரெயில்களைப் பார்த்தோம். தற்போது மின்சார ரெயில்களை பார்க்கிறோம். விரைவில் ஹைட்ரஜனில் இயங்கும் ரெயில்களைப் பார்க்க உள்ளோம்.
இந்திய ரெயில்வே ஹைட்ரஜன் ரெயிலை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. தண்ணீரில் மட்டுமே இயக்கப்படும் இந்த ரெயில் டிசம்பர் மாதத்தில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனி நாட்டில் ஹைட்ரஜன் ரெயில்கள் 2018-ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றன. அது போல சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் இந்திய ரெயில்வே ஹைட்ரஜன் ரெயிலை அறிமுகப்படுத்த தயாராகி உள்ளது.
இந்த ரெயிலை இயக்க ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் இணைந்து மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன். அதனால் நீராவி மட்டுமே வெளியேறுகிறது.
இந்த ரெயிலை இயக்க ஒரு மணி நேரத்திற்கு 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இது அதிகபட்சமாக மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. சத்தமும் மிகக் குறைவு. ஒருமுறை எரிபொருள் தொட்டியை நிரப்பினால், அது 1000 கிலோமீட்டர் வரை செல்ல முடியும்.
முதலில் ஹரியானாவில் ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் ஹைட்ரஜன் ரெயில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டார்ஜிலிங் இமயமலை, ஊட்டி மலை, கல்கா-சிம்லா போன்ற மலைப்பகுதிகளில் ஹைட்ரஜன் ரெயில்களை இயக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளன.
ஒவ்வொரு ஹைட்ரஜன் ரெயிலையும் உருவாக்க ரூ.80 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக மொத்தம் 35 ஹைட்ரஜன் ரெயில்களை இயக்க இந்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளது. டிக்கெட் விலையும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.