இந்தியா

மும்பையில் கனமழை: வடிகாலில் விழுந்து இரண்டு தொழிலாளர்கள் பலி- 4 பேர் கைது

Published On 2023-06-25 21:29 GMT   |   Update On 2023-06-25 21:29 GMT
  • சிவாஜிநகர் 90 அடி சாலை பகுதியில் 2 தொழிலாளர்கள் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுனர்.
  • இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் போலீசில் புகார்.

பருவமழை தாமதமாகிய நிலையில், மும்பையில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. திடீரென பெய்த கனமழையால் சாலை எங்கும் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக, மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. அந்தேரி தகிசர் உள்ளிட்ட சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின.

இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் கோவண்டி, சிவாஜிநகர் 90 அடி சாலை பகுதியில் 2 தொழிலாளர்கள் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுனர்.

அப்போது அவர்கள் தவறி பாதாள சாக்கடைக்குள் விழுந்தனர். வெள்ளம் அவர்களை அடித்து சென்றது. அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் சாக்கடையில் விழுந்த 2 பேரையும் மீட்டு ராஜவாடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடந்த பரிசோதனையில் 2 பேரும் ஏற்கனவே பலியானது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் தனியார் ஒப்பந்த தொழிலாளர் ராம்கிருஷ்ணா (25), சுதீர் தாஸ் (30) என்பது தெரியவந்தது.

இந்நிலையில், வடிகாலில் மூழ்கி இரண்டு தொழிலாளர்கள் இறந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அளித்த புகாரின் பேரில், பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காத தொழிலாளர் ஒப்பந்ததாரர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளதாக அதிகாரி கூறினார்.

Tags:    

Similar News