கனமழை எதிரொலி: கோவாவிற்கு சிகப்பு... மும்பைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
- வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவாவில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்
- மும்பையின் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக மழை பெய்யும்
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கடலோர மாநிலமான கோவாவிற்கு 'ரெட் அலர்ட்' (சிவப்பு அபாய எச்சரிக்கை) விடுத்துள்ளது. இதன்படி தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், வலுவிழந்த மரங்கள் மற்றும் கட்டமைப்புகள் அருகில் மனிதர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (State Disaster Management Authority), வட கோவா மற்றும் தெற்கு கோவா மாவட்டங்களில் தலா ஒன்று என இரண்டு வெவ்வேறு உதவி எண்களுடன் கட்டுப்பாட்டு அறைகளை அமைத்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா மாவட்டங்களில் அரபிக்கடலில் இருந்து மழைமேகங்கள் நெருங்கி வருவதாகவும், இதனால் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும். மேலும், மழை பொழிவின்போது, பெரும்பாலும் வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவாவில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இவ்வாறு அதன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
கோவா நிலை இவ்வாறிருக்க, மும்பை நகருக்கு இந்திய வானிலை ஆய்வு மையம், 'ஆரஞ்சு' எச்சரிக்கை வெளியிட்டிருக்கிறது.
மும்பையில் நேற்று ஒரே இரவில் மிதமான அளவு முதல் கனமழை பெய்தது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில், "இன்று அதிக கனமழை பெய்யும் என்பதால் 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடப்படுகிறது. மும்பையின் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக மழை பெய்யும். ஒருசில இடங்களில் மிக அதிக மழை பெய்யக்கூடும்," என்றும் தெரிவித்துள்ளது.
நள்ளிரவுக்கு பிறகு மழையின் தீவிரம் அதிகரித்து தாதர், மாஹிம், கர், மாடுங்கா மற்றும் குர்லா போன்ற பகுதிகளில், கடந்த 12 மணி நேரத்தில் 40 மி.மீ. முதல் 70 மி.மீ. வரை மழை பதிவாகியுள்ளது என்று மும்பை கார்ப்பரேஷன் தெரிவித்திருக்கிறது.
மத்திய ரெயில்வே மற்றும் மேற்கு ரெயில்வே ஆகிய இரு வழித்தடங்களிலும் உள்ளூர் ரெயில்கள் வழக்கம் போல் இயங்குவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், சில பயணிகள் புறநகர் சேவைகள் தாமதமாகியதாகக் கூறினர்.
ஒரு பகுதியில் 24 மணி நேரத்தில் 20 செ.மீ. அளவிற்கும் அதிகமான கன மற்றும் தீவிர கனமழை பெய்வதை 'சிகப்பு' என்றும் 24 மணி நேரத்தில் 6 செ.மீ. அளவிலிருந்து 20 செ.மீ. அளவிற்கு மிக கனமழை பெய்வதை 'ஆரஞ்சு' என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் வகைப்படுத்துகிறது.