இந்தியா (National)

லாட்ஜ் மாடியில் இருந்து கீழே தள்ளி காவலாளி கொலை- சென்னை சினிமா நடன கலைஞர்கள் 4 பேர் கைது

Published On 2023-04-29 07:59 GMT   |   Update On 2023-04-29 07:59 GMT
  • நடன கலைஞர்களுக்கும், காவலாளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
  • ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து திடீரென காவலாளி யாதகிரியை மாடியில் இருந்து கீழே தள்ளினர்.

சென்னையை சேர்ந்தவர்கள் மணி, பீமா, நரேஷ் மற்றும் நாகராஜ் திரைப்பட நடன கலைஞர்களாக பணியாற்றி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத் சென்றனர். அங்குள்ள லாட்ஜில் தங்கி படப்பிடிப்புக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் இரவு படப்பிடிப்பு முடிந்து லாட்ஜிக்கு வந்த 4 பேரும் மொட்டை மாடிக்கு சென்றனர். தங்களது செல்போனில் சத்தமாக பாடலை வைத்துவிட்டு நடனம் ஆடியபடி மது குடித்தனர்.

இதனால் லாட்ஜில் தங்கி இருந்தவர்களுக்கு தொந்தரவு ஏற்பட்டது. இதுகுறித்து காவலாளி யாதகிரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் மொட்டை மாடிக்கு சென்று அங்கு நடனம் ஆடி கொண்டிருந்தவர்களை கண்டித்தார்.

அப்போது நடன கலைஞர்களுக்கும், காவலாளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து திடீரென காவலாளி யாதகிரியை மாடியில் இருந்து கீழே தள்ளினர். கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். யாதகிரியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னையை சேர்ந்த மணி, பீமா, நரேஷ், நாகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News