இந்தியா

வாக்களித்ததற்கான ஒப்புகை சீட்டை 100 சதவீதம் எண்ண வேண்டும்: இந்தியா கூட்டணி தீர்மானம்

Published On 2023-12-20 07:32 GMT   |   Update On 2023-12-20 07:32 GMT
  • யாருக்கு வாக்களித்தோம் என்பதை விவிபாட் எந்திரம் மூலம் வாக்காளர்களுக்கு காட்டப்படும்.
  • இந்த ரசீது மக்களிடம் காண்பிக்கப்பட்டு, பின்னர் ஒரு பாக்சில் சேகரிக்கப்பட வேண்டும்.

இந்திய கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் 28 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தின் பல்வேறு விசயங்களை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகளில் ஏராளமான சந்தேகம் இருக்கிறது. இதனால் புதிய நடைமுறையை தேவை. விவி பேட் (வாக்கு அளித்ததற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம்) ரசீது வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பின் சேமிக்கப்பட வேண்டும் ஆகிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வாக்கு எந்திரம் அறிமுகப்படுத்திய காலத்தில் இருந்தே அதன் செயல்பாட்டில் சந்தேகம் இருந்து வருகிறது. வல்லுனர்கள் உள்ளிட்ட பலர் இதுகுறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். நாங்கள் பலமுறை தேர்தல் ஆணையத்திற்கு விரிவாக குறிப்புகளை கொடுத்துள்ளோம். ஆனால் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. பல கேள்விகளை எழுப்பி நாங்கள் தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளோம். ஆனால் இந்தியா கூட்டணி பிரதிநிதிகளை சந்திக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுகிறது.

எங்களுடைய பரிந்துரை எளிதானது. வாக்காளர்கள் வாக்கு அளிக்கும்போது விவிபாட் எந்திரத்தில் ஒரு ஸ்லிப் தோன்றி யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பது காட்டுகிறது. ஆனால் அந்த ஸ்லிப் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு, பின்னர் ஒரு பாக்சில் சேகரிக்கப்பட வேண்டும். 100 சதவீதம் இந்த ஸ்லிப்களை எண்ண வேண்டும். இது வாக்காளர்களுக்கு தேர்தல் நேர்மையாக நடத்தப்படும் என்ற நம்பிக்கை கொடுக்கும் இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒரு தொகுதியின் முடிவு வெளியிடுவதற்கு முன்பாக, ஐந்து வாக்கு மையத்தில் உள்ள விவிபாட் எந்திரத்தில் உள்ள ரசீதுகள் எடுத்து எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News