விமான நிலையங்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த இலக்கு: ஜோதிர் ஆதித்ய சிந்தியா தகவல்
- மாண்டியில் பசுமை விமான நிலையத்துக்கு இட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- சிம்லா விமான நிலையத்தில் ஓடுதள சீரமைப்பு பணிகள் முடிந்துவிட்டன.
புதுடெல்லி :
டெல்லி-தர்மசாலா-டெல்லி மார்க்கத்தில் இண்டிகோ விமான சேவையை டெல்லியில் நேற்று மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
சிவில் விமான போக்குவரத்து துறையில் கடந்த 65 ஆண்டுகளில் நடத்த முடியாத சாதனையை 9 ஆண்டுகளில் சாதித்துள்ளோம். 148 விமான நிலையங்கள், நீர் ஏரோடிராம்கள், ஹெலிபோர்ட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 200 என்ற அளவுக்கு உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
பெரிய அளவிலான மாநகர விமான நிலையங்களுக்கும், கடைக்கோடியில் உள்ள சிறிய விமான நிலையங்களுக்கும் சம முக்கியத்துவம் தரப்படும்.
தர்மசாலா விமான நிலையம் விரிவுபடுத்தப்படும். இதற்கு 2 கட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும். முதல் கட்டமாக தற்போதைய ஓடுதளம் 1900 மீட்டர் அளவுக்கு விரிவுபடுத்தப்படும். இரண்டாவது கட்டமாக ஓடுதளம் 3110 மீட்டர் அளவுக்கு விரிவுபடுத்தப்படும். இதனால் போயிங் 737, ஏர்பஸ் ஏ 320 ரக விமானங்கள் தரையிறங்க முடியும்.
சிம்லா விமான நிலையத்தில் ஓடுதள சீரமைப்பு பணிகள் முடிந்துவிட்டன. மாண்டியில் பசுமை விமான நிலையத்துக்கு இட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சிவில் விமான போக்குவரத்து துறை முழுமையான ஜனநாயகமயமாக்கலைக் கண்டுள்ளது,
மேலும் விமானம் பறப்பதை மட்டுமே பார்க்கக்கூடியவர்களும் இன்று விமானங்களில் பறக்கிறார்கள்.
இமாசலபிரதேசத்தில் 2013-14-ம் ஆண்டில் வாரத்துக்கு 40 விமான சேவை இருந்தது. இப்போது 9 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 110 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.
தர்மசாலாவில், வாரத்துக்கு 28 விமான சேவை என்பது தற்போது 50 என்ற அளவுக்கு வளர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.