கேரள வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் காணொலி மூலம் பிரசாரம்
- தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
- கொரோனா பாதிப்பு மற்றும் நிபா வைரஸ் பரவியபோது, சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தவர் கே.கே.சைலஜா.
கோழிக்கோடு:
கேரள மாநிலம் வடகரா பாராளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடது முன்னணி சார்பில் முன்னாள் மந்திரி கே.கே.சைலஜா போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் காணொலி காட்சி மூலம் மலையாளத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இதுவரை நடைபெற்ற தேர்தல்களுக்கும், இந்த முறை நடைபெற உள்ள தேர்தலுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்த சமயத்தில் கே.கே.சைலஜா போன்றவர்கள் பாராளுமன்றத்திற்கு சென்று நமது குரலை எதிரொலிப்பது அவசியம்.
கொரோனா பாதிப்பு மற்றும் நிபா வைரஸ் பரவியபோது, சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தவர் கே.கே.சைலஜா. மனம் தளராமல் நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து மக்களை காப்பாற்றினார். தேர்தலில் கே.கே.சைலஜா வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.