சந்தர்ப்பவாதிகளின் கூட்டம்: பழைய வீடியோவை ஒளிபரப்பி பாஜக- ஜேடிஎஸ்-ஐ விமர்சித்த டிகே சிவக்குமார்
- முடா ஊழல் குற்றச்சாட்டில் சித்தராமையா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.
- சித்தராமையாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே செயல்பட்டு வருகிறார்கள்- டிகே சிவக்குமார்
கர்நாடாக மாநில முதல்வராக இருக்கும் சித்தராமையா முடா ஊழல் வழக்கில் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை வலியுறுத்தி வருகின்றன. மேலும், மைசூரு நோக்கி நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக காங்கிரஸ் கட்சி பொதுகூட்டங்களை நடத்தி வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளை விமர்சனம் செய்து வருகின்றனர்.
அவ்வாறு நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் வீடியோவை வெளியிட்டு பாஜகவும், மதசார்பற்ற கட்சியும் ஒருவருக்கொருவர் பேசியதை சுட்டிக்காட்டி டிகே சிவக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக டிகே சிவகுமார் கூறும்போது "காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் யுக்திகள் வேலை செய்யாது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சிதான் கர்நாடக மாநிலத்தில் ஆட்சி செய்யும்.
கடந்த வருடம் மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்தனியாக போட்டியிட்டன. மக்களவை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் மதசார்பற்ற ஜனதா தளம் இணைந்தது.
எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாதிகளின் கூட்டம். பழைய எதிரிகள் நண்பர்களாகிவிட்டார்கள். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் விரும்பத்தக்க பதவியை வகிப்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாததால், சித்தராமையாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே செயல்பட்டு வருகிறார்கள். மக்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது காவிரி பிரச்சனை மற்றும் மேகதாது தொடர்பாக பேரணி நடத்தினோம். பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டோம். பாஜக தற்போது அதை காப்பி அடிக்கிறது. எதிர்க்கட்சிகளின் இந்த நடைபயணம், தங்கள் பாவங்களையும், பெரும் ஊழலையும் கழுவுவதற்கான ஒரு பிராயச்சித்தம் அணிவகுப்பு
இவ்வாறு டிகே சிவக்குமார் தெரிவித்தார்.