இந்தியா

மலையாள திரையுலகில் பாலியல் துன்புறுத்தலா?- ஹேமா கமிஷன் அறிக்கையில் பகீர் தகவல்

Published On 2024-08-20 02:31 GMT   |   Update On 2024-08-20 02:31 GMT
  • கமிஷன் கடந்த 2019-ம் ஆண்டே அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.
  • 4½ ஆண்டுகளுக்கு பிறகு 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிஷன் அறிக்கையை கேரள அரசு வெளியிட்டுள்ளது.

திருவனந்தபுரம்:

கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டார். இந்த சம்பவம் திரையுலகினரை அதிர வைத்தது. பின்னர் நடத்திய விசாரணையில் நடிகர் திலீப் தூண்டுதலின் பேரில் இந்த பலாத்கார சம்பவம் நடந்தது என்று வெளியான தகவல் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இதற்கிடையே பல பிரச்சனைகளை நடிகைகள் சந்தித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை தொடர்ந்து கேரள நடிகைகள் மற்றும் சினிமா பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகள் குறித்து விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும் என நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் ஒன்றை கேரள அரசு நியமித்தது. அதாவது மலையாள திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலின சமத்துவம் குறித்து ஆய்வு செய்ய இந்த கமிஷன் அமைக்கப்பட்டது.

இந்த கமிஷன் கடந்த 2019-ம் ஆண்டே அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால் அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. இதற்கு மலையாள சினிமா உலகில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் 4½ ஆண்டுகளுக்கு பிறகு 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிஷன் அறிக்கையை கேரள அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 51 பேரின் வாக்குமூலத்தின்படி இந்த அறிக்கை தயாரானது. அதே சமயத்தில் மொத்த மலையாள திரையுலகமும் 15 ஆண் பிரபலங்களின் பிடியில் உள்ளது என்றும், பல நடிகைகள் ஓட்டலில் தனி அறையில் தங்கியிருக்க அஞ்சியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியானது மலையாள திரையுலகில் புயலை கிளப்பியுள்ளது. மேலும் இதுதொடர்பாக மேற்கொண்டு கேரள அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

Tags:    

Similar News