மசோதாக்களுக்கு உடனடி ஒப்புதல் வேண்டுமென்றால்... கேரள கவர்னர் முகமது ஆரிப் பேட்டி
- கேரளத்தில் உள்ள கண்ணூா் பல்கலைக்கழக துணைவேந்தராக கோபி நாத் ரவீந்திரனை மறுநியமனம் செய்ய மாநில அரசு பரிந்துரைத்தது.
- தற்போது மாநிலத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் பதவி நீண்ட காலமாக காலியாக உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் நிருபர்களிடம் திருவனந்தபுரத்தில் கூறியதாவது:-
என்னிடம் ஊடகங்கள் வாயிலாக மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் பேச வேண்டாம். எந்தவொரு மசோதா அல்லது அவசரச் சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றால், ஏன் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கவர்னர் மாளிகைக்கு வந்து முதல்-மந்திரி விளக்கம் அளிக்க வேண்டும்.
அவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டால், பாரபட்சம் இல்லாமல் எந்தவொரு மசோதா, அவசரச் சட்டம் அல்லது பரிந்துரையை தகுதி அடிப்படையில் பரிசீலிப்பேன் என உறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்தாா்.
கேரளத்தில் உள்ள கண்ணூா் பல்கலைக்கழக துணைவேந்தராக கோபி நாத் ரவீந்திரனை மறுநியமனம் செய்ய மாநில அரசு பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரைக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் அளித்தாா். இதற்கு எதிரான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 'பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை நியமிக்கவோ, மறு நியமனம் செய்யவோ கவர்னர் மட்டுமே தகுதியுடையவா். ஆனால், ரவீந்திரனின் மறுநியமனத்தில் மாநில அரசின் தலையீடு இருந்தது தெளிவாகத் தெரிகிறது' என்று கூறி, ரவீந்திரனின் மறுநியமனத்தை அண்மையில் ரத்து செய்தது.
இது தொடா்பாக கவர்னர் ஆரிப்பிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, 'ரவீந்திரனின் மறுநியமன விவகாரத்தில் மாநில அரசின் தலைமை வக்கீலிடம் ஆலோசனை கோரினேன். அப்போது ரவீந்திரனை மறுநியமனம் செய்யலாம் என்று அரசுத் தலைமை வழக்குரைஞா் கூறினாா். அவா் சட்டரீதியாக அளித்த ஆலோசனையைத் தொடா்ந்து, அந்த விவகாரத்தில் மாநில அரசின் அழுத்தத்துக்கு அடி பணிந்தேன். எனினும் நான் செய்தது தவறு என்பதை ஊடகத்தின் முன்பாக ஏற்கெனவே தெரிவித்திருந்தேன்.
தற்போது மாநிலத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் பதவி நீண்ட காலமாக காலியாக உள்ளது. அதற்கு மாநில அரசே காரணம். உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து பல்கலைக்கழகங்களின் வேந்தராக துணைவேந்தா்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன். துணைவேந்தா்கள் நியமனத்தில் மாநில அரசின் அறிவுரைகளை ஏற்கத் தயாா். ஆனால், அரசின் அழுத்தத்துக்கு அடி பணியமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.