அடிப்படை பொருளாதார பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்- பிரதமருக்கு கார்கே வலியுறுத்தல்
- வேலையில்லா திண்டாட்ட விகிதம் 9.2 சதவீதமாக உயர்ந்திருப்பதால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
- குடும்பங்களின் சேமிப்புகள் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளன.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் வருகிற 23-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
கேமராக்களுக்கு முன்பு இத்தகைய கூட்டம் நடத்தும்போது நாட்டின் அடிப்படை பொருளாதார பிரச்சனைகளிலும் கவனம் செலுத்துமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
மோடி ஜி, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சமத்துவமின்மை போன்றவற்றால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை உங்கள் அரசு குழியில் தள்ளிவிட்டது.
வேலையில்லா திண்டாட்ட விகிதம் 9.2 சதவீதமாக உயர்ந்திருப்பதால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
20 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 40 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது இளைஞர்களிடையே வேலை சந்தையில் கடுமையான நெருக்கடியை எடுத்துக்காட்டுகிறது.
விவசாயிகள் வருவாய் இரட்டிப்பு, 50 சதவீதத்துக்கு மேற்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை வாக்குறுதிகள் பொய்யாகிவிட்டன.
7 பொதுத்துறை நிறுவனங்களில் 3.84 லட்சம் வேலை இழப்பு நடந்துள்ளது. இந்த நிறுவனங்களில் அரசின் பெரும்பான்மை பங்குகள் விற்கப்பட்டு விட்டன. இதுவும் தலித், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் வேலையிழப்புக்கு காரணம் ஆகும்.
2016-ம் ஆண்டில் இருந்து 20 பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கை குறைந்த அளவுக்கு மோடி அரசு விற்றதன் மூலம் 1.25 லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்கள்.
விலைவாசி உயர்வு உச்சம் தொட்டிருக்கிறது. பருப்பு, மாவு, அரிசி, பால், சர்க்கரை, தக்காளி, உருளைக்கிழக்கு, வெங்காயம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளன.
இதனால் குடும்பங்களின் சேமிப்புகள் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளன.
100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மக்களிடையே பொருளாதார சமத்துவமின்மை அதிகரித்து இருக்கிறது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு கணிசமாக சரிந்திருக்கிறது. 100 நாள் வேலைத்திட்டத்தில் சராசரி வேலை நாட்கள் குறைக்கப்பட்டு உள்ளது.
மோடி ஜி கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள் உங்கள் அரசை விளம்பரப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தி வருகிறீர்கள். மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கிறீர்கள்.
ஆனால் 2024 ஜூன் மாதத்துக்கு பிறகு இனியும் அது வேலைக்கு ஆகாது. மக்கள் உங்களிடம் கணக்கு கேட்க தொடங்கி உள்ளனர்.
நாட்டின் பொருளாதாரத்தை தன்னிச்சையாக சீர்குலைப்பதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு மல்லிகர்ரஜுன கார்கே கூறியுள்ளார்.