முதல் மாநிலமாக ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் மகாராஷ்டிரா
- ஓய்வு பெறும்போது முந்தைய 12 மாத அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் பென்சன்.
- மத்திய அரசின் பங்களிப்பு 18.5 சதவீதமாக இருக்கும்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (UPS- Unified Pension Scheme) முடிவு செய்தது. மத்திய அரசு வேலையில் 2004 ஜனவரி 1-ந்தேதிக்குப் பிறகு சேர்ந்தவர்களுக்கு இந்த ஓய்வூதிய திட்டம் பொருந்தும்.
இந்த திட்டத்தின்மூலம் ஊழியர் ஓய்வு பெறுவதற்கு முன் கடந்த 12 மாதங்களில் பெறும் அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். இதற்கு 25 வருடங்கள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
2025 ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து மத்திய அரசின் பங்களிப்பு 14 சதவீதத்தில் இருந்து 18.5 சதவீதமாக அதிகரிக்கும். இதற்காக கூடுதலாக வருடத்திற்கு 6,250 கோடி ரூபாய் செலவாகும். இந்த தகவலை அஷ்வினி வைஷ்ணவ் கடந்த சனிக்கிழமை தெரிவித்தார்.
மத்திய அரசின் பங்களிப்பு அதிகரித்த போதிலும், ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆட்சி செய்யும் அரசுகள் பழைய ஓய்வூதியம் திட்டத்தை திரும்ப கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றன. இந்த நிலையில் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் இந்தியாவில் முதல் மாநிலமாக அமல்படுத்துகிறது. நேற்று நடைபெற்ற ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிரா மாநில ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றம் அடைவார்கள்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. விரைவில் மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநில அரசு அமல்படுத்துகிறது.