வரும் பாராளுமன்ற தேர்தலில் பொது தேர்தல் அறிக்கை குறித்து ஆலோசித்தோம் - மல்லிகார்ஜூன கார்கே
- பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது.
- இதில் 6 மாநில முதல் மந்திரிகள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
பாட்னா:
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் மேற்கொண்டு வருகிறார். பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா, ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற தலைவர்கள் பா.ஜ.க. அரசை வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.
எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் இமாசல பிரதேசத்தின் சிம்லாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை உள்ள கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். பாராளுமன்ற தேர்தலையொட்டி பொது தேர்தல் அறிக்கையை தயார் செய்வது குறித்து ஆலோசித்தோம். அடுத்த ஆலோசனை கூட்டத்தில் பொதுத் தேர்தல் அறிக்கை குறித்து முடிவெடுப்போம். எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 10 அல்லது 12-ம் தேதி இமாசல பிரதேசத்தின் சிம்லாவில் நடைபெறும் என தெரிவித்தார்.