இந்தியா

போராடுவதை கைவிட்டு துர்கா பூஜையில் கவனம் செலுத்த சொன்ன மம்தா.. பெண் டாக்டரின் தாய் கேட்ட ஒரே கேள்வி

Published On 2024-09-10 09:58 GMT   |   Update On 2024-09-10 09:58 GMT
  • மேற்கு வங்கத்தின் பிரதான பண்டிகையான துர்கா பூஜா அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் மம்தா இவ்வாறு கூறியுள்ளார்.
  • அவரது [மம்தா] குடும்பத்தில் இதுபோன்று நடந்திருந்தால் இப்படி பேசியிருப்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்ற குற்றவாளியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

பெண் மருத்துவருக்கு விரைந்து நீதி கிடைக்கவும் மருத்துவர்களின் பணிச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி அம்மாநிலத்தில் இன்னும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இன்று மாலைக்குள் மருத்துவர்கள் தங்களின் போராட்டங்களை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

இந்நிலையில் மக்கள் போராட்டத்தில் கவனம் செலுத்துவதை கைவிட்டுவிட்டு எதிர்வரும் துர்கா பூஜா பண்டிகையில் கவனம் செலுத்தும்படி மம்தா பானர்ஜி கூறியுள்ளது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. மேற்கு வங்கத்தின் பிரதான பண்டிகையான துர்கா பூஜா அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் மம்தா இவ்வாறு கூறியுள்ளார். இந்நிலையில் உயிரிழந்த பெண் மருத்துவரின் தாய் மம்தாவின் கருத்தை சாடியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது, நாங்கள் இதுவரை எங்கள் மகளுடன் துர்கா பூஜா பண்டிகையை கொண்டாடி வந்தோம். ஆனால் இனி வரும் வருடங்கள் அனைத்திலும் அது நடக்கப்போவதில்லை. அவரது [மம்தா] குடும்பத்தில் இதுபோன்று நடந்திருந்தால் இப்படி பேசியிருப்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். முதலில் எனது மகளை அவர்கள் கொலை செய்தார்கள், இப்போது அந்த கொலைக்கு நீதி கேட்கும்  போராட்டத்தையும் ஒடுக்க பார்கிறார்கள் என்று பெண் மருத்துவரின் தாய் வேதனை தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News