இந்தியா

நிவாரணத் தொகை பெறுவதற்காக நாடகமாடிய பெண்- ஒடிசா ரெயில் விபத்தில் கணவர் இறந்ததாக பொய் புகார்

Published On 2023-06-07 16:47 GMT   |   Update On 2023-06-07 16:47 GMT
  • ஒடிசாவின் பாலசோர் எனும் இடத்தில் 3 ரெயில்கள் மோதிக்கொண்டன.
  • இந்த கோர விபத்தில் 278 பேர் உயிரிழந்தனர்.

புவனேஸ்வர்:

ஒடிசாவின் பாலசோர் எனும் இடத்தில் 3 ரெயில்கள் மோதிக்கொண்ட மிக கோரமான விபத்தில் 278 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்னாயக் ரூ.5 லட்சமும், பிரதம மந்திரி ரூ.2 லட்சமும், ரெயில்வே அமைச்சகம் ரூ.10 லட்சமும் நிவாரணம் அறிவித்துள்ளனர். விபத்திற்கான காரணத்தை கண்டறிய சி.பி.ஐ. ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரெயில் விபத்தில் இறந்தவர்களின் பெயரில் போலியாக வரும் நிவாரண கோரிக்கைகளை கண்டறிந்து அவற்றை கோருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒடிசா தலைமை செயலாளர் பி.கே.ஜெனா இந்திய ரெயில்வே, ஒடிசா போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, இந்த நிவாரணத்தை பெறுவதற்காக தன் கணவர் என வேறு ஒருவரின் சடலத்தை அடையாளம் காட்டிய பெண், போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்.

ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தின் மனியாபந்தா எனும் இடத்தைச் சேர்ந்தவர் கீதாஞ்சலி தத்தா. இவரது கணவர் பிஜய் தத்தா.

ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் கீதாஞ்சலி தத்தா, தன் கணவரான பிஜய் தத்தா உயிரிழந்ததாக கூறி, இறந்தவர்களின் சடலங்களில் கணவரது உடல் என ஒரு சடலத்தை அடையாளம் காட்டினார். அவர் சமர்ப்பித்த ஆவணங்களை சரிபார்த்தபோது, அவை போலியானவை என தெரிய வந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

கடந்த 13 வருடங்களாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்வதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், அந்த பெண்மணியின் கணவர் பிஜய் தத்தா, தன் மனைவியின் மீது போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் பொது பணத்தை அபகரிக்க முயற்சி செய்ததற்காகவும், உயிரோடு உள்ள தன்னை ரெயில் விபத்தில் மரணம் அடைந்ததாக கூறியதற்காகவும் கீதாஞ்சலி மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளார். காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு பயந்து கீதாஞ்சலி தலைமறைவாகியுள்ளார்.

Tags:    

Similar News