இந்தியா (National)

ஐந்து கோரிக்கைகளை முன்வைத்த ப.சிதம்பரம்: இன்னும் கொஞ்சம் காப்பி அடிக்கவும் எனவும் கிண்டல்

Published On 2024-07-24 11:34 GMT   |   Update On 2024-07-24 11:34 GMT
  • தினசரி குறைந்த பட்ச ஊதியம் 400 ரூபாய் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • மார்ச் மாதம் வரையில் கட்டப்படாத கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும்.

மோடி தலைமையிலான மத்திய அரசு 3-வது முறையாக அமைந்த நிலையில் நாடாளுமன்றத்தில் முதலாவது மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.

மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இருந்து பெரும்பாலானவற்றை காப்பி அடித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்திருந்தது. மேலும் பட்ஜெட்டில் பல மாநிலங்கள் பெயர் குறிப்பிடப்படவில்லை எனவும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் பதவி நாற்காலியை பாதுகாப்பதற்கான பட்ஜெட் (ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ததை சுட்டிக்காட்டி) எனவும் விமர்சித்திருந்தது.

இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தார்.

மாநிலங்களவையில் இன்று பேசும்போது ப.சிதம்பரம் கூறியதாவது:-

தினசரி குறைந்த பட்ச ஊதியம் 400 ரூபாய் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளான எம்.எஸ்.பி.-க்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் அல்லது குறைந்த பட்ச ஆதார விலை கொடுக்க வேண்டும்.

மார்ச் மாதம் வரையில் கட்டப்படாத கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும்.

ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் அக்னிவீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

நீட் தேர்வு முறை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை உரிமையை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

மேலும், தயவு செய்து இன்னும் கொஞ்சம் காப்பி அடிக்கவும் என கிண்டல் செய்தார்.

அத்துடன் வேலையாப்பின்மை மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம், 2024 ஜூனில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை 9.2 சதவீதமாக மதிப்பிட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

Tags:    

Similar News