சட்ட ஆலோசனை பெற்ற பிறகே ஆட்சியில் இணைந்தோம்: மந்திரி சகன் புஜ்பால்
- தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
- கட்சியின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் விதிகள் முறையாக பின்பற்றப்பட்டு உள்ளன.
மும்பை :
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் விருப்பம் இன்றி, அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் அஜித்பவார் உள்ளிட்ட 9 பேர் ஆளும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளனர். அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும் மற்ற 8 பேர் மந்திரிகளாகவும் பதவியேற்றனர். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கட்சி வரம்பை மீறி செயல்பட்டதாக கூறி அஜித்பவார் உள்ளிட்ட 9 பேரையும் கட்சிதாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய சரத்பவார் தரப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதேசமயம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தங்களுக்கு தான் அதிகமாக இருப்பதால் கட்சியும், சின்னமும் தங்களுக்கு தான் சொந்தம் என அஜித்பவார் தரப்பு கூறி வருகிறது.
இந்த நிலையில் தகுதி நீக்க நடவடிக்கை குறித்து ஷிண்டே அணியை சேர்ந்த மந்திரி சகன் புஜ்பால் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அஜித்பவார் தலைமையிலான அரசில் இணைவது குறித்து சட்ட வல்லுனர்களிடம் கலந்தாலோசித்து அதன்பிறகு தான் முடிவு எடுக்கப்பட்டது. 2 முதல் 4 வல்லுனர்களுடன் பேசி தகுதி நீக்கத்தில் இருந்து தப்பிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுடன் இணைவற்கு முன்பு கட்சியின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் விதிகள் முறையாக பின்பற்றப்பட்டு உள்ளன.
அஜித்பவாருக்கு ஆதரவாக 42 முதல் 43 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரமாண பத்திரங்களில் கையெழுத்திட்டு உள்ளனர்.
கட்சி தலைவர் சரத்பவாரின் படங்களை போஸ்டர்களில் பயன்படுத்தலாமா என்பது குறித்து அஜித்பவாரும் மற்ற தலைவர்களும் பேசி முடிவெடுப்பார்கள்.
சரத்பவாரின் மகளை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக நியமிக்க வேண்டும் என்றும், அஜித்பவாரை மகாராஷ்டிராவை கையாள அனுமதிக்க வேண்டும் என்றும் நாங்கள் முன்பே பரிந்துரைத்தோம். ஆனால் அப்படி நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தனது புகைப்படத்தை அனுமதி இன்றி யாரும் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அதையும் மீறி அஜித்பவார் தலைமையில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அவரது புகைப்படம் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.