null
மோடியின் தியானம் அரசியல் நாடகம்.. உண்மையான பக்தராக இருந்தால் இதை செய்யட்டும் - கார்கே தாக்கு
- மோடி மறைமுகமாக பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
- " அரசியல் ஆதாயங்களுக்காக ஒரு மதத்தினருக்கு எதிராக மற்றோரு மதத்தினரிடம் வெறுப்பைப் பரப்புவது தவறானது"
பிரதமர் மோடியின் கன்னியாகுமரி தியானம் தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம் என்று கார்கே தெரிவித்துள்ளார். 3 நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்து வருகிறார்.
நாளை (மே 31) மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் மோடி மறைமுகமாக பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. தியானம் செய்வதாக இருந்தால் தனிப்பட்ட முறையில் இல்லாமல் கேமராவை கூட்டிச்சென்று வீடியோ எடுப்பது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள கார்கே, மதத்தையும் அரசியலையும் ஒன்று கலக்கக் கூடாது. இரண்டும் தனித்தனியாக இருக்க வேண்டும். அரசியல் ஆதாயங்களுக்காக ஒரு மதத்தினருக்கு எதிராக மற்றோரு மதத்தினரிடம் வெறுப்பைப் பரப்புவது தவறானது.
ஆன்மீக பயணம் என்று போர்வையில் கன்னியாகுமரிக்கு தியானம் செய்யப்போவதாக மோடி சென்றுள்ளது சுத்த நாடகமாகும். தேவையில்லாமல் போலீசாரை பயன்படுத்தி காசை விரயமாக்கும் செயலாகும். மோடியின் இந்த செயல் நாட்டுக்கு தீங்கையே விளைவிக்கும். உங்களுக்கு உன்மையில் கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் உங்களது வீட்டில் இருந்தபடியே தியானம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.