இந்தியா

தொங்கு பாலத்தின் கேபிளை மாற்றாமல் சீரமைத்து விட்டதாக காண்டிராக்டர் ஏமாற்றியது அம்பலம்

Published On 2022-11-02 04:30 GMT   |   Update On 2022-11-02 04:30 GMT
  • தனியார் நிறுவனத்தின் காண்டிராக்டர் தொங்கு பாலத்தை தாங்கி பிடிக்கும் கேபிள்களை மாற்றாமல் வர்ணம் மட்டும் பூசி புதுப்பிக்கப்பட்டது போல மாற்றினார்.
  • மோர்பி 150 பேர் நிற்கக்கூடிய பாலத்தில் ஒரே நேரத்தில் 400 பேர் இருந்ததால் பாலம் அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

அகமதாபாத்:

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் மச்சு நதியில் தொங்குபாலம் அறுந்து விழுந்ததில் 141 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பாலம் மறு சீரமைப்புக்கு பின் திறந்து 5 நாட்களில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது.

முதல் கட்ட விசாரணையில் அதிக பாரம் தாங்காமல் இந்த விபத்து நடந்தது தெரிய வந்தது. 150 பேர் நிற்கக்கூடிய பாலத்தில் ஒரே நேரத்தில் 400 பேர் இருந்ததால் பாலம் அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இந்த தொங்கு பாலத்தை சீரமைக்கும் பணியை மேற்கொண்ட காண்டிராக்டர் அதனை சரிவர செய்யாமல் ஏமாற்றிய விவரம் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்த பாலம் 1879-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும்.

சுமார் 230 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் சிறந்த சுற்றுலா தளமாக இருந்து வருகிறது. 143 ஆண்டுகள் பழமையான பாலம் என்பதால் அதனை சீரமைக்க முடிவு செய்யபட்டு அதற்கான பணியை மேற்கொள்ள கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஓரேவா என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த பணியை முடிக்க வருகிற டிசம்பர் மாதம் வரை அவகாசம் கேட்டு இருந்தார். ஆனால் அடுத்தடுத்து தீபாவளி மற்றும் குஜராத் புத்தாண்டை யொட்டி அதற்கு முன்பாக பணியை முடிக்குமாறு உத்தரவிடப்பட்டதாக தெரிகிறது.

இதனால் அவசரகதியில் இந்த பணி நடந்து கடந்த 26-ந்தேதி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. தனியார் நிறுவனத்தின் காண்டிராக்டர் தொங்கு பாலத்தை தாங்கி பிடிக்கும் கேபிள்களை மாற்றாமல் வர்ணம் மட்டும் பூசி புதுப்பிக்கப்பட்டது போல மாற்றினார். இதுதான் 141 பேர் உயிர் இழந்ததற்கு காரணமாக அமைந்து விட்டது.

இதனால் அந்த நிறுவனம் முழுமையாக பாலத்தை சீரமைத்ததா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகுதான் விபத்துக்கான முழு விவரம் தெரியவரும்.

இந்தநிலையில் பிரதமர் மோடி நேற்று சம்பவம் நடந்த தொங்கு பாலத்தை நேரில் பார்வையிட்டார். விபத்து தொடர்பாக அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்.

இதையடுத்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-

விபத்துக்கான காரணம் உடனடியாக கண்டறியப்பட்டால் தான் எதிர்காலத்தில் இதுபோன்று சம்பவம் ஏற்படுவதை தடுக்க முடியும். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

இயல்பு நிலை திரும்பும் வரை உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த பகுதியில் தங்கி இருந்து கண்காணிக்குமாறு அறிவுத்தப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News