புனேவில் கனமழை - நரக வேதனை அடைந்த மக்களிடம் மன்னிப்பு கேட்ட மந்திரி
- புனே நகரில் பெய்த கனமழையால் மக்கள் நரக வேதனை அனுபவித்தனர்.
- இதற்காக புனே மக்களிடம் மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் மன்னிப்பு கோரியுள்ளார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இரு தினங்களுக்கு முன்பு இடைவிடாமல் 5 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்த மழையால் புனே நகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. புனே மாவட்டத்திலும் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது. குறிப்பாக புனே நகரில் உள்ள மகர்பாடா பகுதியில் 11.6 செ.மீ. மழையும், சிவாஜிநகர் பகுதியில் 10.4 செ.மீ. மழையும் பெய்தது. புனே நகர மக்களுக்கு இந்த மழை நரக வேதனையை கொடுத்தது.
இந்நிலையில், புனே மாவட்ட பொறுப்பு மந்திரியான சந்திரகாந்த் பாட்டீல் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், புனே நகர் மற்றும் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மக்கள் பட்ட வேதனைக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக விரிவான திட்டம் தயாரிக்கப்படும் என தெரிவித்தார்.