பூனையுடன் விளையாடிய நாய் மீது ஆசிட் வீசிய பெண்- வீடியோ வெளியானதால் கைது
- சபிஸ்தா தனது வீட்டில் பூனை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார்.
- நாய் மீது சபிஸ்தா ஆசிட் வீசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மலாட் பகுதியை சேர்ந்த துகாரம் என்பவர் பிரவுனி என்ற நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்கு திடீரென கண் அருகே காயம் ஏற்பட்டது. அது எப்படி ஏற்பட்டது என தெரிந்து கொள்வதற்காக துகாரம் தனது குடியிருப்பு பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த சபிஸ்தா அன்சாரி என்ற பெண் அந்த நாய் மீது ஆசிட் வீசியதைப் பார்த்து துகாரம் அதிர்ச்சி அடைந்தார்.
சபிஸ்தா தனது வீட்டில் பூனை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். அந்த பூனையுடன் துகாரம் வளர்த்து வந்த நாய் விளையாடுவது வழக்கம் என கூறப்படுகிறது. இதற்கு சபிஸ்தா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சம்பவத்தன்று அவர் பூனையுடன் விளையாடிய நாய் மீது ஆசிட் வீசியது தெரிய வந்தது. இதனால் நாய் பிரவுனிக்கு கண் பார்வை இழந்ததோடு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நாய் மீது சபிஸ்தா ஆசிட் வீசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. மேலும், இதுதொடர்பாக துகாரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சபிஸ்தா அன்சாரி மீது விலங்குகளை கொடுமைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதற்கிடையே, கண் பார்வை இழந்த நாயை, தன்னார்வலர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.