ஏழைகளுக்காக 4 கோடி வீடுகள்: ஆனால் எனக்காக ஒன்று கூட இல்லை- ம.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
- உங்களுடைய ஒரு வாக்கு பா.ஜனதா மீண்டும் மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க உதவும்.
- உங்களுடைய வாக்கு டெல்லியில் மோடி அரசை வலுப்படுத்தும்.
பிரதமர் மோடி மத்திய பிரதேச மாநிலம் சட்னாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
என்னுடைய அரசு ஏழை மக்களுக்காக 4 கோடி கான்கிரீட் வீடுகளை உருவாக்கியுள்ளது. ஆனால், எனக்காக அதில் ஒரு வீடு கூட இல்லை. உங்களுடைய ஒரு வாக்கு பா.ஜனதா மீண்டும் மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க உதவும். உங்களுடைய வாக்கு டெல்லியில் மோடியை வலுப்படுத்தவும், மத்திய பிரதேச ஆட்சியில் இருந்து ஊழல் காங்கிரசை பல மைல் தூரத்திற்கு விரட்டவும் உதவும். இதன் அர்த்தம் என்னவெனில், ஒரு வாக்கில் மூன்று அதிசயங்கள். இது மூன்று சக்திகளை (Trishakti) போன்றது.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு திட்டத்தின் மூலம் பயனடைய காங்கிரஸ் கட்சியால் உருவாக்கப்பட்ட 10 கோடி போலி பயனாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அரசு 2.75 லட்சம் கோடி ரூபாயை சேமித்துள்ளது. அரசின் நடவடிக்கைகளால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், தற்போது என்னை வசைபாடுகிறார்கள்.
இப்போது நான் எங்கு சென்றாலும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது பற்றி பேசப்படுகிறது. நாடு முழுவதும் மகிழ்ச்சி அலை வீசுகிறது. நாம் புதிய பாராளுமன்ற கட்டடம் கட்டியுள்ள நிலையில், 30 ஆயிரம் பஞ்சாயத்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.
ஏழை மக்களுக்கு லட்சக்கணக்கான வீடுகள் கட்டிக் கொடுத்ததில் பா.ஜனதாவின் டபுள்-என்ஜின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் மத்திய பிரதேசமும் ஒன்று என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சட்னாவில் ஏழை மக்கள் 1.32 லட்சம் வீடுகளை பெற்றுள்ளனர்.