இந்தியா

புதுமண தம்பதியின் தலையை ஒருவர் பிடித்து வேகமாக முட்டியதை படத்தில் காணலாம்.

புதுமண தம்பதியின் தலையை பிடித்து முட்ட வைத்த விவகாரம்: விளக்கம் கேட்டு மகளிர் ஆணையம் நோட்டீசு

Published On 2023-07-01 03:06 GMT   |   Update On 2023-07-01 03:06 GMT
  • புதுமணத்தம்பதிகள் தலையை சேர்த்து வைத்து முட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
  • வீடியோவை பார்த்த பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

திருவனந்தபுரம் :

திருமணத்தின் போதும் திருமணம் முடிந்த பிறகும் வித, விதமான நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. மணமகனின் வீட்டில் கால் வைப்பதற்கு முன் மணமகளுக்கு ஆரத்தி எடுப்பது, அரிசி நிரப்பப்பட்ட நாழியை காலால் தட்டி விடுவது உள்பட பல்வேறு சடங்குகள், சம்பிரதாயங்கள் நடைபெறுவது வழக்கம். இதுபோன்ற சடங்குகள் தவிர மணமக்களை மனதளவிலும், உடல் ரீதியாகவும் வேதனைப்படுத்தும் சில சம்பவங்களும் பல இடங்களில் நடந்து வருகிறது.

இந்தநிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து மணமகனின் வீட்டுக்குள் செல்வதற்கு முன் புதுமணத்தம்பதிகள் தலையை சேர்த்து வைத்து முட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

பாலக்காடு அருகே உள்ள கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த சச்சினுக்கும், கோழிக்கோடு முக்கம் பகுதியைச் சேர்ந்த சஜ்லாவுக்கும் திருமணம் நடந்தது. மணமகனின் வீட்டின் முன்பு வைத்து புதுமண தம்பதிக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. அதன் பிறகு சஜ்லா வீட்டுக்குள் நுழைய முயன்றார். அப்போது திடீரென மணமக்களின் பின்னால் இருந்த ஒரு நபர் 2 பேரின் தலையையும் பிடித்து பலமாக முட்ட வைத்தார். இதில் 2 பேருக்கும் கடும் வேதனை ஏற்பட்டது. சஜ்லாவின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. அதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் சஜ்லாவுக்கு ஆறுதல் கூறி மணமகனின் தாய் உள்பட உறவினர்கள் அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. வீடியோவை பார்த்த பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

மணமகள் சஜ்லா கூறும்போது, 'திடீரென நடந்த இந்த சம்பவத்தால் தலையில் கடும் வலி ஏற்பட்டது. சிறிது நேரம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை' என்று கூறினார்.

மணமகன் சச்சின் கூறும்போது, 'இப்படி ஒரு சம்பிரதாயம் குறித்து கேள்விப்பட்டதே இல்லை' என்றார். இதுபோன்ற சம்பிரதாயம் பாலக்காட்டில் இருக்கிறது என்று வேறு சிலரும் கூறினர்.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக கேரள மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி கேரளாவில் உள்ள கொல்லங்கோடு போலீசுக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News