இந்தியா

மோடியின் தகுதியற்ற ஆட்சி மாணவர்கள் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தல் - ராகுல் காந்தி

Published On 2024-06-23 03:31 GMT   |   Update On 2024-06-23 03:31 GMT
  • உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
  • தேசிய தேர்வு முகமையின் தலைவரை மத்திய அரசு மாற்றியது.

இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வு இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. சமீபத்தில் இந்த தேர்வுக்கான முடிவுகள் வெளியானது.

இதைத் தொடர்ந்து நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. நீட் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகவும், குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தை சேர்ந்த பலர் முழு மதிப்பெண் பெற்றார்கள் என்றும் சுமார் 1500 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த நிலையில், நீட் முறைகேடு விவகாரம் சர்ச்சையான நிலையில், நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமையின் தலைவரை மத்திய அரசு மாற்றியது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதன் வரிசையில், இன்று நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நீட் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஏராளமான சர்ச்சைகள் அரங்கேறி வரும் நிலையில், தற்போது நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

அந்த வரிசையில், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தற்போது நீட் முதுநிலை தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இது நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் கல்வி அமைப்பு முழுமையாக சீரழிக்கப்பட்டதற்கு மற்றொரு சரியான எடுத்துக்காட்டு ஆகும்.

பா.ஜ.க. ஆட்சி காலத்தில் மாணவர்கள் படிக்க கட்டாயப்படுத்தப்படவில்லை, மாறாக தங்களின் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ள அரசுடன் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் மோடி, இந்த முறை வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை மாஃபியா விவகாரத்தில் எதையும் செய்ய முடியாமல் தவிக்கிறார்.

நரேந்திர மோடியின் தகுதியற்ற ஆட்சி மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. நாம் இந்த நாட்டின் எதிர்காலத்தை கட்டாயம் காப்பாற்றியே ஆகவேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News