இந்தியா

கேரளாவை மீண்டும் மிரட்டுகிறது- நிபா வைரசுக்கு வாலிபர் பலி

Published On 2024-09-16 02:01 GMT   |   Update On 2024-09-16 02:01 GMT
  • கடந்த வாரம் காலில் காயம் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெறுவதற்காக சொந்த ஊருக்கு வந்தார்.
  • பெருந்தல்மன்னாவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தா

மலப்புரம்:

கேரளாவில் 2018 தொடங்கி கடந்த 2023-ம் ஆண்டு வரையிலான இடைபட்ட காலங்களில் நிபா வைரஸ் பாதித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பாதித்து குணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவி மிரட்டி வருகிறது. அதாவது மலப்புரம் மாவட்டம் வண்டூர் அடுத்த நடுவத்து பகுதியை சேர்ந்தவர் 24 வயது வாலிபர். இவர், பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.

கடந்த வாரம் காலில் காயம் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெறுவதற்காக சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர், அங்குள்ள 4 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அடுத்தடுத்து சென்று சிகிச்சை பெற்றார். ஆனாலும் காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து அவர், பெருந்தல்மன்னாவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் கடந்த 9-ந்தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் மாதிரி பரிசோதனைக்காக கோழிக்கோட்டில் உள்ள அரசு வைரஸ் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த பரிசோதனையின் முடிவில் அவர், நிபா வைரஸ் பாதித்து இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து இதனை உறுதிப்படுத்தும் வகையில் புனேவில் உள்ள வைராலஜி ஆய்வகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் புனே வைராலஜி ஆய்வகமும் நிபா வைரஸ் பாதிப்பை உறுதி செய்தது.

Tags:    

Similar News