இந்தியா (National)

சுற்று வட்டபாதை மேலும் குறைப்பு: நிலவை நெருங்கும் சந்திரயான்-3

Published On 2023-08-14 08:46 GMT   |   Update On 2023-08-14 08:46 GMT
  • சந்திரயான் 3 மேலும் நிலவிற்கு அருகே சென்றிருக்கிறது
  • அடுத்த கட்ட குறைப்பு ஆகஸ்ட் 16-ந்தேதி திட்டமிடப்பட்டிருக்கிறது

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO), நிலவில் இறங்கி ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக சந்திரயான் 3 எனும் விண்கலத்தை கடந்த ஜூலை 14 அன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக ஏவியது.

இதில் ஒரு ஆர்பிடர், விக்ரம் எனும் பெயரிட்ட லேண்டரும், நிலவின் மேற்புறத்தில் நகர்ந்து ஆராய்ச்சிகள் செய்து புகைப்படங்கள் எடுக்கும் சிறு வாகனமான பிரக்யான் எனும் ரோவரும் இணைக்கப்பட்டுள்ளது.

வரும் 23-ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை நிலவில் இறக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக நிலவை சுற்றி பயணம் செய்து வரும் இந்த விண்கலத்தின் சுற்று வட்டப்பாதையிலிருந்து அதன் உயரத்தை படிப்படியாக குறைத்து நிலவின் மேற்பரப்பில் இறக்கும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.

ஆகஸ்ட் 9-ம் தேதி 174 கிலோமீட்டர் x 1437 கிலோமீட்டரில் சந்திரயான் 3 விண்கலத்தின் பாதை மாற்றியமைக்கப்பட்டது. தற்போது அதன் சுற்று வட்டப்பாதை 150 கிலோமேட்டர் X 177 கிலோமீட்டர் எனும் அளவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.  இதனால் அது நிலவிற்கு இன்னும் அருகே சென்றிருக்கிறது.

அடுத்த கட்ட சுற்று வட்டப்பாதை குறைப்பு ஆகஸ்ட் 16 அன்று காலை 8.30 மணியளவில் செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. திட்டமிட்டப்படி நிலவில் இதன் லேண்டர் ஆகஸ்ட் 23 அன்று வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டால் அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவிற்கு பிறகு இந்த சாதனையை புரிந்த முதல் நாடாக இந்தியா திகழும்.

Tags:    

Similar News