இந்தியா

ஜல்லிக்கட்டுக்கு எதிராக மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்ற பீட்டா.. தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்

Published On 2023-07-17 16:13 GMT   |   Update On 2023-07-17 16:13 GMT
  • இந்த விளையாட்டுகள் விலங்குகளுக்கு சொல்லொணா துன்பம் மற்றும் வேதனையை ஏற்படுத்துவதாக புகார்.
  • விரிவான உண்மை மற்றும் அறிவியல் ரீதியான ஆவணங்களில் எந்தப் பகுதியையும் இந்த தீர்ப்பு கருத்தில் கொள்ளவில்லை.

புதுடெல்லி:

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போட்டிக்கு விலங்குகள் நல அமைப்பான பீட்டா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் ஆதரவாக இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி நடந்த பெரும் போராட்டத்தைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் தமிழக அரசு புதிய சட்டத்தை இயற்றியது.

ஆனால், ஜல்லிக்கட்டை தடை செய்யும் குறிக்கோளுடன் இருந்த பீட்டா, உச்ச நீதிமன்றத்தை நாடியது. ஜல்லிக்கட்டு என்ற பெயரில் காளைகள் சித்ரவதை செய்யப்படுவதாக கூறி வழக்கு தொடர்ந்தது. ஆனால் பீட்டாவுக்கு இவ்வழக்கில் பின்னடைவே ஏற்பட்டது. இந்த வழக்கில் கடந்த மே மாதம் 18-ந் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை நடத்தும் தமிழக அரசின் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதே போன்று மகாராஷ்டிராவில் மாட்டு வண்டி பந்தயம், கர்நாடகாவில் எருமை பந்தய விளையாட்டான கம்பாலா ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கும் சட்டங்களும் செல்லும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் மே மாதம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக பீட்டா அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஜல்லிக்கட்டு, கம்பாலா போன்ற விளையாட்டுகள் காளைகள் மற்றும் எருமைகளின் இயற்கையான உள்ளுணர்வு மற்றும் உடற்கூறியலுக்கு எதிரானவை, அவை எந்த நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. இந்த விளையாட்டுகள் விலங்குகளுக்கு சொல்லொணா துன்பம் மற்றும் வேதனையை ஏற்படுத்துகின்றன.

ஜல்லிக்கட்டு, கம்பாலா மற்றும் மாட்டு வண்டி பந்தயங்கள் இயல்பிலேயே கொடூரமானவை. குற்றம்சாட்டப்பட்ட அம்சங்கள் தொடர்பாக திருத்தங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னரும் கூட அந்த கொடுமைகள் தொடர்கின்றன. இதுதொடர்பான விரிவான உண்மை மற்றும் அறிவியல் ரீதியான ஆவணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் எந்தப் பகுதியையும் இந்த தீர்ப்பு கருத்தில் கொள்ளவில்லை. உச்ச நீதிமன்றம் சட்டத்தின் கடுமையான பிழையைச் செய்துவிட்டது.

இவ்வாறு பீட்டா தனது மனுவில் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News