இந்தியா (National)

சந்திரயான்-3 லேண்டர் நிலவில் கால்பதித்த ஆக.23-ந்தேதி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும்: பிரதமர் மோடி

Published On 2023-08-26 03:39 GMT   |   Update On 2023-08-26 06:22 GMT
  • நமது விஞ்ஞானிகள் நம் நாட்டிற்கு மாபெரும் பரிசை அளித்திருக்கிறார்கள்.
  • நிலவில் கால் பதித்த 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்று உள்ளது.

பெங்களூரு:

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா விண்ணில் செலுத்திய சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23-ந்தேதி வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கியது.

அந்த சமயத்தில் பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். எனவே அவர் இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்துவதற்காக நேரடியாக இன்று அதிகாலை 5 மணிக்கு பெங்களூரு வந்தார். எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்கிய மோடியை கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், பா.ஜ.க. தலைவர்கள் வரவேற்றனர்.

காலை 6.30 மணியளவில் பிரதமர் மோடி அங்கிருந்து பீனியாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன (இஸ்ரோ) கட்டுப்பாட்டு மையத்துக்கு திறந்த வாகனத்தில் பேரணியாக சென்றார். அவரை வரவேற்பதற்காக 5 ஆயிரத்துக்கும் அதிகமான பா.ஜ.க.வினர் சாலையின் இருபுறங்களிலும் நின்று மலர்கள் தூவி வரவேற்பு கொடுத்தனர். பீனியா அருகே மோடி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உரையாற்றினார்.

"ஜெய் விக்யான், ஜெய் அனுசந்தன்.. என்று முழக்கமிட்டு மோடி பேச தொடங்கினார். உடனே அங்கு கூடியிருந்த மக்களும் பா.ஜ.க. தொண்டர்களும் ஜெய் விக்யான், ஜெய் அனுசந்தன் என்று கோஷமிட்டனர். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:-

நமது விஞ்ஞானிகள் நம் நாட்டிற்கு மாபெரும் பரிசை அளித்திருக்கிறார்கள். பெங்களூருவில் மக்கள் ஆர்ப்பரிக்கும் இதே காட்சிகளை தான் கிரீஸ் நாட்டிலும் கண்டேன். என்னால் என்னையே கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. முதலில் நான் இந்தியா வந்ததும் பெங்களூருக்கு வர வேண்டும் என்று தான் எண்ணினேன். முதலில் விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து அவர்கள் முன் தலைவணங்க நான் காத்திருக்கிறேன்.

பெங்களூரு மக்கள் காட்டும் இந்த ஆர்வம் என்னை மேலும் மகிழ்ச்சிபடுத்துகிறது. விஞ்ஞானிகளை காண நான் ஆர்வமாக இருக்கிறேன். இந்தியா ஒரு மாபெரும் மைல்கல்லை அடைந்த நேரத்தில் நான் இந்தியாவில் இல்லாத காரணத்தினால், முதலில் இந்தியா வந்ததும் நேராக பெங்களூருக்கு செல்ல வேண்டுமென்று விரும்பினேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை தொடர்ந்து இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்த பிரதமர் மோடியை இஸ்ரோ தலை வர் சோம்நாத் வரவேற்றார்.

அவரை பிரதமர் மோடி கட்டித்தழுவி பாராட்டினார். பின்னர் சந்திரயான்-3 மாதிரியை காட்டி அதன் செயல்பாடு குறித்து சோம்நாத் விளக்கி கூறினார். இதனை தொடர்ந்து இஸ்ரோ அலுவலகத்திற்குள் விஞ்ஞானிகளை பாராட்டும் வகையில் கைதட்டியபடியே பிரதமர் மோடி நடந்து சென்றார். விஞ்ஞானிகளும் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் மற்றும் அவரது தலைமையிலான விஞ்ஞானிகளை நேரில் சந்தித்த பிரதமர் மோடி அவர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். பின்னர் விஞ்ஞானிகளோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து பிரதமர் மோடிக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் சந்திராயன்-3 எடுத்த புகைப்படங்களை பரிசாக வழங்கினர்.

பிறகு விஞ்ஞானிகளை வாழ்த்தி மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

நிலவில் கால் பதித்த 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்று உள்ளது. விஞ்ஞானிகளின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறேன். விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பான பணியால் விண்வெளி துறையில் நமது தேசம் சாதனை படைத்துள்ளது.

சுதந்திர இந்தியாவின் அடையாள சின்னமான அசோக சின்னம் நிலவில் பதிக்கப்பட்டு வருகிறது. சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பை தொட்ட தருணம் மறக்க முடியாதது. உங்கள் அனைவருக்கும் நான் சல்யூட் செய்ய நினைத்தேன்.

நீங்கள் தேசத்தை எந்த அளவுக்கு உயரத்துக்கு அழைத்துச் சென்றுள்ளீர்கள் என்றால், இது சாதாரணமானது அல்ல. இந்தியா நிலவில் கால் வைத்துள்ளது. நம் நாட்டின் கவுரவத்தை நிலவில் நாம் நிலைநாட்டி உள்ளோம். விண்வெளி துறையின் சாதனைகள், பங்களிப்பு இளைஞர்களுக்கு உந்துசக்தியாக விளங்குகிறது.

உலக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியா தலைமை ஏற்கும். இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் நிலவை ஆய்வு செய்வதற்கான புதிய வாசல்களை திறந்து உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று இருந்தாலும் எனது மனம் முழுவதும் இஸ்ரோ விஞ்ஞானிகளுடனேயே இருந்தது.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பிற்காகவும், முயற்சிக்காகவும், துணிவிற்காகவும் மனமார்ந்த பாராட்டுகள். இந்திய விஞ்ஞானிகளின் அறிவியல் பூர்வ எழுச்சியை உலகமே வியந்து பார்க்கிறது. நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய பகுதி சிவ சக்தி என்று அழைக்கப்படும். சந்திரயான்-3 திட்டத்தில் பெண்களின் பங்கு அதிகமாக உள்ளது. அதனால் 'சிவசக்தி' என அழைப்பதே சிறந்ததாகும். பூமி என்பது பெண் சக்தியின் அடையாளமாக திகழ்கிறது. இமயம் முதல் குமரி வரை இந்தி யாவை இணைக்கும் தாரக மந்திரமாக சிவசக்தி உள்ளது.

நிலவில் யாரும் செய்யாத சாதனையை நாம் அனைவரும் போராடி படைத்திருக்கிறோம். நம் இந்திய மணித்திருநாட்டின் கவுரவத்தை நிலவில் நிரூபித்து இருக்கிறோம். 2019-ல் சந்திரயான் 2 நிலவில் தனது இடத்தை பதித்த இடம் திரங்கா (மூவர்ணக்கொடி) என அழைக்கப்படும். எந்த தோல்வியும் இறுதியானது அல்ல என்பதை நமக்கு நினைவூட்டவே திரங்கா என பெயர் சூட்டப்படுகிறது.

நிலவில் சந்திரயான்-3 தடம் பதித்த ஆகஸ்டு 23-ந் தேதியை இந்தியாவின் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடுவோம். இந்த நாளில் விஞ்ஞானம், அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். நிலவில் பிரக்யான் ரோவரின் வீரத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

முழு உலகமும் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை ஏற்றுக்கொண்டு உள்ளது. லேண்டரின் மென்மையான தரை இறக்கத்தை சோதிக்க நமது விஞ்ஞானிகள் இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தில் செயற்கை நிலவை உருவாக்கியுள்ளனர்.

லேண்டர் அங்கு செல்வதற்கு முன்பு பல சோதனைகளில் தேர்ச்சி பெற்றதால் வெற்றி உறுதியானது. ஒரு தலைமுறையையே நீங்கள் எழுப்பிவிட்டீர்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பின்னர் தனி விமானம் மூலம் டெல்லி திரும்பினார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பெங்களூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News