மக்கள் மன்றத்தில் முடிவுகளை எடுப்பவன் நான் - காங்கிரசுக்கு பிரதமர் மோடி பதிலடி
- விதிமீறலில் ஈடுபட்டதாக பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப் போவதாக காங்கிரஸ் தெரிவித்தது.
- மத்திய பிரதேசம் மாநிலத்தின் குணா தொகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
போபால்:
சத்தீஸ்கரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழஙகும் திட்டம் நீட்டிக்கப்படுகிறது என்றார்.
ஆனால், நடத்தை விதிகளை மீறியதற்காக பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.
இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தின் குணா தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் தருவதாக அறிவித்து குற்றம் இழைத்துள்ளதால் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் சென்று புகார் அளிக்கப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
காங்கிரசைக் கண்டு நான் பயப்பட வேண்டுமா? என்னைத் தடுக்க நீங்கள் உலகில் எந்த நீதிமன்றத்திற்கும் செல்லலாம்.
நான் மக்கள் மன்றத்தில் முடிவுகளை எடுக்கிறேன் என்று அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன் என தெரிவித்தார்.