இந்தியா

மக்களவையில் சினிமா வசனங்களால் ராகுலை பந்தாடிய மோடி..

Published On 2024-07-03 05:39 GMT   |   Update On 2024-07-03 05:39 GMT
  • காங்கிரஸ் கட்சி கடந்த 1984-ம் ஆண்டுக்குப்பிறகு 250 இடங்களை தாண்டவில்லை. தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.
  • பிரதமர் மோடி 2¼ மணி நேரம் தொடர்ச்சியாக பேசினார்.

18-வது பாராளுமன்ற முதல் கூட்டத்தொடர் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு மற்றும் சபாநாயகர் தேர்தலை தொடர்ந்து, மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள்.

இந்த விவாதத்தில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.

இதற்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் உடனுக்குடன் பதிலடி கொடுத்தனர். இதனால் பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் அனல்பறந்தது.

இதனிடையே ராகுல் காந்தி பேசிய சில பேச்சுகளை சபைக் குறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து பாராளுமன்ற மக்களவையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதில் அளித்து பிரதமர் மோடி நேற்று பேசினார். நேற்று மாலை 4.15 மணிக்கு தனது உரையை தொடங்கினார். அப்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் மோடி... மோடி... என்று கோஷம் எழுப்பினர்.

அதே நேரம் பிரதமர் தனது உரையை தொடங்கியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மணிப்பூர்... மணிப்பூர் என கோஷமிட்டனர். மேலும் சர்வாதிகாரத்தை நிறுத்துங்கள் எனவும் நீதி வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

ஆனாலும் பிரதமர் தனது பேச்சை தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சியினரின் கோஷம் அதிகரித்ததால், சிறிது நேரம் தனது பேச்சை நிறுத்தி அமைதியாக நின்றார்.

அப்போது சபாநாயகர் ஓம்பிர்லா, எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதியாக இருக்கும்படி கூறினார். அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டதால், சபாநாயகர் கடும் கண்டனத்தை தெரிவித்தார். சபை நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் பேசுங்கள் என்று கூறினார்.

ஆனாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர், நீட் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கோஷம் எழுப்பியபடியே இருந்தனர்.

எதிர்கட்சியினரின் கடும் அமளிக்கிடையே பிரதமர் மோடி பேசியதாவது:-

காங்கிரஸ் பொய்களை அரசியலின் ஆயுதமாக்குகிறது. நாடு வளர்ச்சி பாதையை தேர்ந்தெடுத்தாலும், காங்கிரஸ் குழப்பத்தை பரப்புவதில் குறியாக உள்ளது. இந்தியாவில் பொருளாதார அராஜகத்தை உருவாக்கும் நோக்கில் காங்கிரஸ் செயல்படுகிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் எடுத்து வரும் பொருளாதார நடவடிக்கைகள், தேசிய பொருளாதாரத்தில் சுமையாக மாறும்.

காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்ட 16 மாநிலங்களில், அதன் ஓட்டு சதவீதம் சரிந்துள்ளது. குஜராத், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில், காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு, 64 இடங்களில், 2ல் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதே நேரம் கூட்டணி கட்சிகளின் வாக்குகளை ஒட்டுண்ணியாக பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி கடந்த 1984-ம் ஆண்டுக்குப்பிறகு 250 இடங்களை தாண்டவில்லை. தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இப்போது அவர்களுக்கு கிடைத்து இருப்பதும் பெரிய தோல்விதான்.

ஆனால் காங்கிரஸ் தாங்கள் வெற்றிபெற்றுவிட்டதாக நினைத்துக்கொண்டு இருக்கிறது. போலி வெற்றியை கொண்டாடுவதை நிறுத்துங்கள். காங்கிரஸ் வரலாற்றில் தொடர்ந்து 3-வது முறையாக 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவில்லை. அடுத்து வரும் தேர்தலிலும் நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில்தான் அமர வேண்டும்.

"காங்கிரஸ் தலைவர்களின் அறிக்கைகள் 'ஷோலே' படத்தையும் மிஞ்சியுள்ளன. படத்தில் வரும் மௌசி ஜியை நீங்கள் அனைவரும் நினைவில் வைத்திருப்பீர்கள். நாங்கள் மூன்றாவது முறை தோற்றோம் ஆனால் மௌசி ஜி, இது ஒரு தார்மீக வெற்றி.

"மௌசி, எங்களுக்கு 13 மாநிலங்களில் பூஜ்ஜிய இடங்கள் கிடைத்தன, ஆனால் நான் ஒரு ஹீரோ. கட்சியை மூழ்கடித்துவிட்டோம், ஆனால் அது இன்னும் சுவாசிக்கிறது."

இவ்வாறு பிரதமர் மோடி காங்கிரசை கிண்டலடித்து பேசினார்.

அமிதாப் பச்சன் மற்றும் ஹேம மாலினி நடித்த 'ஷோலே' படத்தில் வரும் நகைச்சுவை காட்சியை பற்றி குறிப்பிட்டார்.

பிரமர் மோடி தனது பேச்சை மாலை 4.15 மணிக்கு தொடங்கினார். மாலை 6.30 மணிக்கு பேச்சை நிறைவு செய்தார். மொத்தம் அவர் 2¼ மணி நேரம் தொடர்ச்சியாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News