இந்தியா (National)

தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல்காந்தி கடிதம்

Published On 2024-09-28 12:43 GMT   |   Update On 2024-09-28 12:43 GMT
  • தமிழக மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
  • வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம்.

செப்டம்பர் 21 அன்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி தமிழக மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது

இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தை மயிலாடுதுறை எம்.பி சுதா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அக்கடிதத்தில் "செப்டம்பர் 21, அன்று 37 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதையும், அவர்களின் படகுகளை இலங்கை அதிகாரிகள் கைப்பற்றியது தொடர்பாகவும் உங்களுக்கு எழுதுகிறேன்.

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா என்னிடம் கூறியதாவது: கைது செய்யப்பட்ட மீனவர்கள் சம்பவத்தன்று ஆபத்தில் சிக்கிய இலங்கைப் படகை மீட்க முயன்றனர். அப்போது மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக இலங்கை அதிகாரிகளை தொடர்பு கொண்ட போதிலும், சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டியதாகக் கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படடு பெரும் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் பேசி மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News