இந்தியா

நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்தினால் தொடர் விளைவுகள் ஏற்படும்: நீதித்துறை எச்சரிக்கை

Published On 2022-12-26 03:40 GMT   |   Update On 2022-12-26 03:40 GMT
  • ஓய்வுபெறும் வயது ஒரு அடுக்கு விளைவை ஏற்படுத்தக்கூடும்.
  • நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது ஒரு தொடர் விளைவை ஏற்படுத்தும்.

புதுடெல்லி :

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65 ஆகவும், ஐகோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62 ஆகவும் உள்ளது.

இதில் ஐகோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்துவதற்கு கடந்த 2010-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் விடப்பட்டது.

ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் பரிந்துரை எதுவும் அரசிடம் இல்லை என மத்திய சட்ட மந்திரி கிரண் ரெஜிஜூ கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட நீதித்துறை செயல்முறைகள் மற்றும் சீர்திருத்தங்கள் பற்றிய விவரங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் உள்ள நீதித்துறை, பணியாளர் நலன், நீதித்துறை சார்ந்த பாராளுமன்ற நிலைக்குழுவிடம் சமர்ப்பித்து உள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நிலுவையில் உள்ள வழக்குகளை குறைத்து நீதித்துறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதுடன் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும்.

அதேநேரம் ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது, செயல்படாத மற்றும் குறைவாகச் செயல்படும் நீதிபதிகள் பணியில் தொடர வழிவகுக்கும்.

ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதால், ஓய்வுபெற்ற நீதிபதிகளை தலைமை அதிகாரிகளாக அல்லது நீதித்துறை உறுப்பினர்களாகக் கொண்டிருப்பதை தீர்ப்பாயங்கள் இழக்க நேரிடும். ஓய்வுபெறும் வயது ஒரு அடுக்கு விளைவை ஏற்படுத்தக்கூடும்.

மத்திய மற்றும் மாநில அளவில் உள்ள அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கமிஷன்கள் போன்றவற்றில் இதே கோரிக்கையை எழுப்புவதால், நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது ஒரு தொடர் விளைவை ஏற்படுத்தும். எனவே, இந்தப் பிரச்சினையை முழுமையாக ஆராய வேண்டும்.

இவ்வாறு நீதித்துறையின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News