இந்தியா

ராஜஸ்தான்: 'கல்விக்கு கடவுள் சரஸ்வதி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை' என கூறிய ஆசிரியர் சஸ்பெண்ட்

Published On 2024-02-25 12:26 GMT   |   Update On 2024-02-25 12:26 GMT
  • “கல்விக்கு சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை" எனக்கூறிய ஆசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்
  • “சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன என கேட்கிறார்கள். சொல்லிருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சஸ்பெண்ட் செய்கிறேன்”

ராஜஸ்தானில் குடியரசு தினத்தின் போது மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் படங்களுக்கு மத்தியில் சரஸ்வதியின் புகைப்படத்தை வைக்க மறுத்து, "கல்விக்கு கடவுள் சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை" எனக்கூறிய ஆசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பாரான் மாவட்டத்தில் கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள லக்டாய் கிராமத்தில், ஆரம்பப் பள்ளி ஆசிரியையாக ஹேம்லதா பைர்வா என்பவர் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழாவின் மேடையில், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் கடவுள் சரஸ்வதியின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அப்போது ஆசிரியை ஹேம்லதா பைர்வா இரு தலைவர்கள் உடன் சரஸ்வதியின் புகைப்படம் வைப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், 'கல்விக்கு சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை' என்று ஆசிரியை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 22-ம் தேதி ராஜஸ்தானின் கல்வி அமைச்சர் மதன் திலாவர், பாரான் மாவட்டத்தில் உள்ள கிஷான்கஞ்ச் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், "சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன என கேட்கிறார்கள். சொல்லிருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சஸ்பெண்ட் செய்கிறேன்" என தெரிவித்திருந்தார்.

கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்புக்குப் பின், பாரான் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, அந்த ஆசிரியைக்கு பணியிடை நீக்கத்திற்கான உத்தரவை பிறப்பித்தார். குற்றச்சாட்டுகள் தொடர்பான முதற்கட்ட விசாரணை முடிவடைந்ததை அடுத்தே இடைநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில், லவ் ஜிஹாத், இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக 2 ஆசிரியர்கள் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News