இந்தியா

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை முற்றிலும் தவறானது: காங்கிரஸ் எதிர்ப்பு

Published On 2022-11-12 02:23 GMT   |   Update On 2022-11-12 02:23 GMT
  • சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, நாட்டின் மனசாட்சியை உலுக்கி உள்ளது.
  • இந்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி தெளிவாக விமர்சிக்கிறது.

புதுடெல்லி :

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ராஜீவ்காந்தி கொலை கைதிகளை விடுவிக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு முற்றிலும் ஏற்க முடியாதது. முற்றிலும் தவறானது.

இந்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி தெளிவாக விமர்சிக்கிறது. முற்றிலும் ஏற்க முடியாதது என்று கருதுகிறது.

இப்பிரச்சினையில், இந்தியாவின் மனநிலைக்கு ஏற்ப சுப்ரீம் கோர்ட்டு செயல்படாதது மிகவும் துரதிருஷ்டவசமானது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

6 பேர் விடுதலை குறித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, நாட்டின் மனசாட்சியை உலுக்கி உள்ளது. அரசியல் உலகத்தின் அனைத்து தரப்பிலும் பலத்த கவலைகளையும், விமர்சனத்தையும் உண்டாக்கி உள்ளது.

அவர்கள் மீது சோனியாகாந்தி கருணை காட்டியதாக கேட்கிறீர்கள். சோனியாகாந்தி தனிப்பட்ட கருத்துகள் கொண்டிருப்பதற்கு உரிமை உள்ளது. ஆனால், கட்சி அதில் உடன்பட வேண்டிய அவசியம் இல்லை.

கட்சியின் நிலைப்பாடு தெளிவானது, உறுதியானது. ஒரு பிரதமரின் கொலையில், ஒரு நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, அடையாளம் ஆகியவை அடங்கி இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். அதனால்தான் இப்பிரச்சினையில் மாநில அரசின் நிலைப்பாட்டை முந்தைய மத்திய அரசுகளும், தற்போதைய மத்திய அரசும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த தீர்ப்பு தொடர்பாக தி.மு.க.வுடன் முரண்படுவோமா என்று கேட்கிறீர்கள். கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தியுடனே முரண்படும்போது, கூட்டணி கட்சியுடன் எப்படி உடன்படுவோம்?

இந்த பிரச்சினையில், மறுஆய்வு மனு தாக்கல் உள்பட சட்டரீதியான எல்லா பரிகாரங்களையும் மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு செய்தித்தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா கூறுகையில், ''பிரதமரும், மத்திய அரசும் இந்திய பிரதமரை கொலை செய்த பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்படுவதை ஆதரிக்கிறார்களா?'' என்று கேள்வி விடுத்தார்.

Tags:    

Similar News