இந்தியா

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published On 2024-09-13 06:27 GMT   |   Update On 2024-09-13 06:27 GMT
  • பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என்று கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார்.
  • மதுபான கொள்கை குற்றச்சாட்டில் புதிய ஊழல் வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்து அவரை சிறைக்குள்ளேயே கைது செய்து இருந்தது.

புதுடெல்லி:

டெல்லியில் ஆட்சி அமைத்த ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கையில் மாற்றங்களை கொண்டு வந்தார்.

ஆனால் அவர் மதுபான கொள்கையை மாற்றி அமல்படுத்தியதில் முறைகேடுகள் செய்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

குறிப்பாக மதுபான கொள்கை மாற்றம் மூலம் ஆம்ஆத்மி கட்சிக்கு முறைகேடாக ரூ.100 கோடிக்கு மேல் கிடைத்து இருப்பதாக இ-மெயில் தகவல் பரிமாற்றத்தை ஆதாரமாக கொண்டு சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். துணை முதல்-மந்திரியாக இருந்த மணிஷ் சிசோடியா முதலில் கைது செய்யப்பட்டார்.

அதன்பிறகு இந்த முறை கேடுகளுக்கு டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக சி.பி.ஐ. கூறியது. இதையடுத்து பண முறைகேடு தடுப்பு சட்ட வழக்கில் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என்று கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று அவருக்கு இடைக்கால ஜாமினை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியது. அதன் அடிப்படையில் அவர் விடுதலையாகி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அவர் தாமாக முன்சென்று திகார் ஜெயிலுக்கு சென்றார். இதையடுத்து அவர் ஜாமின் மனு தாக்கல் செய்தார். அவருக்கு அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமின் கிடைத்தது.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி சி.பி.ஐ. தரப்பில் அவர் கைது செய்யப்பட்டார். மதுபான கொள்கை குற்றச்சாட்டில் புதிய ஊழல் வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்து அவரை சிறைக்குள்ளேயே கைது செய்து இருந்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்தார். தனக்கு ஜாமின் மறுக்கப்பட்டதை எதிர்த்தும் மற்றொரு மனு செய்திருந்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த ஜூன் மாதம் முதல் நடைபெற்று வந்தது.

கடந்த மாதம் இது தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து முடிந்தது. கெஜ்ரிவால் விடுதலை செய்யப்படுவாரா? என்பது செப்டம்பர் 5-ந்தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் அன்று அந்த தீர்ப்பு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு வலைதளத்தில் செப்டம்பர் 13-ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு மீதான விசாரணை தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதி சூரியகாந்த் தீர்ப்பை வெளியிட்டார்.

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை விடுதலை செய்வதாக அவர் தீர்ப்பில் அறிவித்துள்ளார்.

கெஜ்ரிவாலை விடுதலை செய்த போதிலும் அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு நிபந்தனைகளை விதித்து உள்ளது. நீதிபதி தீர்ப்பு விவரம் வருமாறு:-

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. அவர் கைது செய்யப்பட்டபோது குற்றவியல் நடைமுறை சட்டங்கள் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளன.

சிறையில் இருந்து வெளியில் சென்ற பிறகு இது தொடர்பாக கெஜ்ரிவால் யாரிடமும் எதுவும் பேசக்கூடாது. அவர் பிணைத் தொகையாக ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும்.

அமலாக்கத்துறை வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டபோது எத்தகைய நிபந்தனைகள் விதிக்கப்பட்டதோ அந்த நிபந்தனைகள் அனைத்தும் இந்த மனு மீதான தீர்ப்புக்கும் பொருந்தும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜாமின் கிடைத்ததை தொடர்ந்து முதல்-மந்திரி கெஜ்ரிவால் 5 மாதங்களுக்கு பிறகு ஜெயிலில் இருந்து வெளியில் வர உள்ளார்.

Tags:    

Similar News