நாலே நாட்களில் இரண்டாவது பயிற்சி விமான விபத்து
- பயின்றவர், பயிற்றுவிப்பவர் இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டன
- விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை
மகாராஷ்டிரா மாநில புனே மாவட்டத்தில் உள்ளது பாராமதி தாலுக்கா.
பாராமதியில் விமான ஓட்டுதல் பயிற்சி அளிக்கும் ரெட் பேர்ட் விமான பயிற்சி நிறுவனம் (Red Bird Flight Training Academy) எனும் நிறுவனத்திற்கு சொந்தமான டெக்னாம் விடி-ஆர்பிடி (Tecnam VT-RBT) விமானம் ஒன்று, நேற்று காலை 08:00 மணியளவில் அம்மாவட்டத்தின் கோஜுபாவி கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு வயலில் கீழே விழுந்து நொறுங்கியது.
அதிர்ஷ்டவசமாக இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
ஆனால், அவ்விமானத்தில் பயிற்சி பெற்று கொண்டிருந்த விமானி ஒருவருக்கும் அவருக்கு பயிற்றுவிப்பவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை விபத்துக்கான காரணம் தெரியவில்லை. அவசரமாக தரையிறங்க முற்பட்ட போது இந்த விமானம் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கொண்டு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த 19 அன்று பாராமதி தாலுகாவில் ஒரு விமானம் கீழே விழுந்தது என்பதும் அச்சம்பவம் நடந்து 4 நாட்களில் அதே போன்ற இரண்டாவது சம்பவம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.