இந்தியா (National)

அதிமுக தலைமை யாருக்கு..? பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்

Published On 2023-02-22 14:59 GMT   |   Update On 2023-02-22 14:59 GMT
  • ஒபிஎஸ் தனக்குத்தான் அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என கூறுவது உண்மை அல்ல என எடப்பாடி தரப்பில் வாதம்.
  • உட்கட்சி தேர்தலை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே அறிவித்ததாக ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்தது.

புதுடெல்லி:

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமா்வு விரிவாக விசாரணை நடத்தியது.

இரட்டை தலைமை தொடர்பாக நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு எடப்பாடி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர், ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் கட்சியின் விதிப்படி நடைபெற்றது. ஒபிஎஸ் தனக்குத்தான் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என கூறுவது உண்மை அல்ல என வாதிடப்பட்டது.

தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கிய பொதுக்குழுவே அவற்றை நீக்க முடியும் என்ற வாதம் தவறு. கட்சியின் உட்கட்சி பதவிகளுக்கான தேர்தலை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே அறிவித்தனர் என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்தது.

2017-ம் ஆண்டில் அசாதாரண சூழலின்போது பொதுக்குழு கூடி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது. பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அவை தலைவருக்கு அதிகாரம் இல்லை என்பதை மறந்துவிட்டனர் என வாதிடப்பட்டது.

ஜனவரி 11ம் தேதி இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. பின்னர் எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். 

இந்நிலையில், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமைக்கான முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News