சீன இளம் பெண்ணை இந்து முறைப்படி காதல் திருமணம் செய்த ஆந்திர வாலிபர்
- புருஷோத்தமன் முன்கூட்டியே சொந்த ஊருக்கு வந்து திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார்.
- மணமகள் மிங்மிங் பட்டுப் புடவையும், மணமகன் புருஷோத்தமன் கோட் சூட் அணிந்து திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி, கொத்தப்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் புருஷோத்தமன். பி.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரான இவர் சீனாவில் உள்ள கார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
அதே நிறுவனத்தில் சீனாவை சேர்ந்த மிங்மிங் என்று இளம்பெண் கேஷியராக வேலை செய்து வருகிறார். ஒரே நிறுவனத்தில் புருஷோத்தமன், மிங்மிங் வேலை செய்து வந்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அவர்களது பெற்றோர்களிடம் கூறினர்.
அவர்களது பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
புருஷோத்தமன் முன்கூட்டியே சொந்த ஊருக்கு வந்து திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார். நேற்று முன்தினம் சீனாவில் இருந்து தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் மணமகள் நகரிக்கு வந்தார்.
அவர்களுக்கு மணமகன் வீட்டார் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மணமகள் மிங்மிங் பட்டுப் புடவையும், மணமகன் புருஷோத்தமன் கோட் சூட் அணிந்து திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர்.
இந்து முறைப்படி மணமகள் திருமண முகூர்த்த புடவையும், மணமகன் வேட்டி சட்டை அணிந்து வந்து மணமேடையில் அமர்ந்தனர்.
பின்னர் பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். மணமக்களை திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் வாழ்த்தி சென்றனர்.