இந்தியா

கோவாக்சின் தடுப்பூசி குறித்த ஆய்வு - ஒப்புதல் பெறவில்லை என ஐ.சி.எம்.ஆர். காட்டம்

Published On 2024-05-20 10:12 GMT   |   Update On 2024-05-20 10:12 GMT
  • கோவாக்சின் போட்டவர்களில் 30 சவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் வெளியாகி இருந்தது.
  • பருவ வயது கொண்ட பெண்கள் மற்றும் அலர்ஜி இருப்போருக்கு பாதிப்புகள் அதிகம் என்றும் கூறப்பட்டது.

உலகளவில் பெரும் பாதிப்புகளையும், லட்சக்கணக்கில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய கொடூர நோயாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அதற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணிகளில் ஆய்வாளர்கள் தீவிரம் காட்டினர்.

அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என இரண்டு தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. கொரோனா பெருந்தொற்றை கடந்துவிட்ட நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு உடலில் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது பலரையும் அதிர்ச்சியடைய செய்தது.

அந்த வரிசையில், தற்போது கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பக்கவிளைவுகள் ஏற்படுவதாக என தகவல் வெளியானது.

கோவாக்சின் போட்டவர்களில் 30 சவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் வெளியாகி இருந்தது. இதில் பருவ வயது கொண்ட பெண்கள் மற்றும் அலர்ஜி இருப்போருக்கு இதன் பாதிப்புகள் அதிகம் என்றும் கூறப்பட்டது.


இந்நிலையில், கோவாக்ஸ் தடுப்பூசியின் பக்க விளைவுகள் குறித்து பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வுக்கு ஐசிஎம்ஆர் கண்டனம் தெரிவித்துள்ளது.

கோவாக்சின் தடுப்பூசி குறித்த பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் சமீபத்திய ஆய்விற்கு தங்களிடம் ஒப்புதல் எதுவும் பெறவில்லை என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது. மேலும், இந்த ஆய்வு மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் சீரற்ற ஆய்வு முறைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ள ஐசிஎம்ஆர், ஆய்வு முடிவை திரும்ப பெற வேண்டும், ஆய்வு முடிவுகளில் தங்கள் பெயரை நீக்க வேண்டும், திரும்பப் பெறப்படாவிட்டால், சட்டரீதியாக மற்றும் நிர்வாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் சுமார் 30 சதவீத பேருக்கு கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக வெளியான அறிக்கை முற்றிலும் தவறானது என தெரிவித்துள்ள ஐசிஎம்ஆர், ஆய்வறிக்கையை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

Similar News