இந்தியா

கோவை சம்பவம்- தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

Published On 2022-10-27 10:27 GMT   |   Update On 2022-10-27 10:27 GMT
  • கோவை குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.
  • கோவை கார் வெடிப்பு வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, உளவு துறை கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன், தேவாசீர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் விரிவாக விவாதிக்கப்பட்டது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கினார்.

இந்நிலையில் கோவை குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார். கோவை சம்பவம் போன்று வருங்காலங்களில் நடைபெறாமல் இருக்க காவல்துறையில் சிறப்பு படை உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில், தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவை கார் வெடிப்பு வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கையை தேசிய புலனாய்வு அமைப்பு பதிவு செய்துள்ளது.

Tags:    

Similar News