வேலையில்லா திண்டாட்டம்: அரசு பியூன் வேலைக்காக குவிந்த என்ஜினீயர்கள்- பி.டெக் பட்டதாரிகள்
- 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பியூன் வேலைக்கான நேர்காணலுக்கு அதிகாலையிலேயே திரண்டு வந்தனர்.
- 2022-ம் ஆண்டு உள்ள தகவல்களின் படி கேரளாவில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 5.1 லட்சமாக உள்ளது.
கொச்சி:
இந்தியாவிலேயே அதிக கல்வி அறிவு பெற்ற மாநிலம் என பெயர் பெற்ற கேரளாவில் வேலையில்லா திண்டாட்டமும் அதிகமாக இருப்பதை அங்கு நடந்த ஒரு சம்பவம் எடுத்து காட்டி உள்ளது.
அங்கு அரசு அலுவலகத்தில் காலியாக உள்ள பியூன் வேலைக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான நேர்காணல் தேர்வு எர்ணாகுளத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் வேலைக்காக திரண்டனர். பியூன் வேலையில் சேருவதற்கு அடிப்படை தகுதி 7-ம் வகுப்பு படித்திருந்தாலே போதும். ஆனால் நன்கு சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த வேலைக்கு மாதம் ரூ.23 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.
அரசு வேலை, நல்ல சம்பளம் என்பதால் இந்த வேலைக்காக என்ஜினீயரிங், பி.டெக். படித்து முடித்தவர்கள், பட்டதாரிகள் என 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பியூன் வேலைக்கான நேர்காணலுக்கு அதிகாலையிலேயே திரண்டு வந்தனர்.
என்ஜினீயரிங், பி.டெக் போன்ற படிப்புகள் படித்து விட்டு வேலை கிடைக்காமல் உணவு டெலிவரி, கால்டாக்சி டிரைவர் வேலைகள் செய்வதற்கு பதிலாக இந்த வேலை பாதுகாப்பானது என்பதாலும், அரசு வேலை என்பதாலும் இதில் சேர ஆர்வமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
நேர்காணலுக்கு வந்திருந்த கொச்சியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் கூறுகையில், கேரள அரசின் மின்வாரியம் போன்ற நிறுவனங்களில் எங்களை நியமித்தால் சம்பளம் இன்னும் அதிகமாக இருக்கும். அதாவது ரூ.30 ஆயிரத்திற்கு மேல் கிடைக்கும் என்பதால் வேலைக்கு விண்ணப்பித்திருப்பதாக கூறினார்.
தொடர்ந்து நடைபெற்ற சைக்கிள் ஓட்டும் தேர்வில் 101 பட்டதாரிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். அவர்களுக்கு இன்னும் சில தேர்வுகள் உள்ளன. அவற்றையும் கடந்த பிறகுதான் தரவரிசை பட்டியல் தயாராகும். அதன்பிறகே வேலை யாருக்கு கிடைக்கும் என்பது அறிவிக்கப்பட உள்ளது.
பல லட்சங்கள் செலவு செய்து 4 முதல் 5 ஆண்டுகள் வரை பட்டப்படிப்பு படித்து முடித்தாலும், தகுதியான வேலை கிடைக்காததால் சாதாரண பியூன் வேலை என்றாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு வந்துள்ளதை இந்த சம்பவம் உணர்த்தி உள்ளது. அந்த அளவுக்கு வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2022-ம் ஆண்டு உள்ள தகவல்களின் படி கேரளாவில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 5.1 லட்சமாக உள்ளது. இதில் 3.2 லட்சம் பேர் பெண்கள் ஆவார்கள். மற்ற மாநிலங்களை விட இது அதிகமாகும்.