இந்தியா

கேரள போலீஸ் பயிற்சி பள்ளிக்கு நாய் குட்டிகள் வாங்கியதில் முறைகேடு- உதவி கமாண்டன்ட் 'சஸ்பெண்டு'

Published On 2023-07-12 04:24 GMT   |   Update On 2023-07-12 04:24 GMT
  • நாய் குட்டிகளை மிகவும் அதிகமான விலை கொடுத்து வாங்கியதாக புகார் எழுந்தது.
  • உதவி கமாண்டன்ட் சுரேஷை உள்துறை அமைச்சகம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருச்சூரில் மாநில போலீஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இங்கு போலீஸ் பயிற்சி பள்ளி மட்டுமின்றி, துப்பறியும் நாய்களுக்கான பயிற்சி பள்ளியும் உள்ளது. இந்த அகாடமியில் 125 நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் வசதி இருக்கிறது.

இந்த நிலையில் இந்த நாய்கள் பயிற்சி பள்ளிக்கு பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாய் குட்டிகள் வாங்கப்பட்டன. அந்த நாய் குட்டிகளை மிகவும் அதிகமான விலை கொடுத்து வாங்கியதாக புகார் எழுந்தது.

மேலும் பயிற்சி பள்ளியில் உள்ள நாய்களுக்கு உணவு மற்றும் பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து புகார்கள் வந்ததையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் நாய் குட்டிகள் அதிக விலை கொடுத்து வாங்கியதும், முறைகேடுகள் நடந்ததும் உறுதியானது.

நாய் பயிற்சி பள்ளியின் சிறப்பு அதிகாரியான கேரள ஆயுதப்படை போலீசின் 3-வது பட்டாலியன் உதவி கமாண்டன்ட் சுரேஷ் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கேரள மாநிலம் உள்துறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது.

அதன் அடிப்படையில் உதவி கமாண்டன்ட் சுரேஷை உள்துறை அமைச்சகம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.

Tags:    

Similar News