இந்தியா (National)
null

மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர் ரவிஉப்பல் கைது

Published On 2023-12-13 05:30 GMT   |   Update On 2023-12-13 05:38 GMT
  • போக்கர், டென்னிஸ், பாட்மிட்டன், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பேரில் சூதாட்டம் நடத்தப்பட்டது.
  • சவுரப் சந்திரகர் கடந்த அக்டோபர் மாதம் ராய்பூர் கோர்ட்டில் ஆஜரானார்.

புதுடெல்லி:

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் அவரது நண்பரான ரவிஉப்பல் ஆகிய இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு துபாய் சென்று அங்கு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாக்கினர்.

இதில் போக்கர், டென்னிஸ், பாட்மிட்டன், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பேரில் சூதாட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மகாதேவ் செயலியின் உரிமையாளர் சவுரப் சந்திரகரின் திருமணம் துபாயில் நடைபெற்றது.

இந்த விழாவில் ஏராள மான இந்தி நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். அவர்களுக்கு ஹவாலா முறையில் பெரும் தொகை வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும் சூதாட்ட செயலி வாயிலாக ரூ.6 ஆயிரம் கோடி வரை மோசடி நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த புகார் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.


மேலும் சத்தீஸ்கர் மற்றும் மும்பை போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புகார் தொடர்பாக மும்பையில் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

மேலும் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல், மகாதேவ் சூதாட்ட செயலி நிறுவனத்திடம் இருந்து ரூ.508 கோடி வரை பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளும் சத்தீஸ்கர் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில் வழக்குகள் தொடர்பாக சூதாட்ட செயலி உரிமையாளர்களில் ஒருவரான சவுரப் சந்திரகர் கடந்த அக்டோபர் மாதம் ராய்பூர் கோர்ட்டில் ஆஜரானார்.

இதைத்தொடர்ந்து சூதாட்ட செயலியின் மற்றொரு உரிமையாளரான ரவிஉப்பலை பிடிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. அவர் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதை தொடர்ந்து அவரை பிடிக்க சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) மூலம் ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் ரவிஉப்பல் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்டர்போல் மூலம் அமலாக்கத்துறை வழங்கிய ரெட்கார்னர் நோட்டீஸ் அடிப்படையில் துபாயில் உள்ளூர் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News