இந்தியா (National)

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு

Published On 2024-10-13 06:54 GMT   |   Update On 2024-10-13 06:54 GMT
  • தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கொண்டாட்டத்துக்கு பிறகு தேர்தல் நடத்தப்படலாம்.
  • நவம்பர் 2-வது அல்லது 3-வது வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி:

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் நவம்பர் மாதம் 26-ந்தேதி முடிவடைகிறது.

81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிகாலம் ஜனவரி 5-ந்தேதி முடிவடைகிறது. இதனால் இந்த இரு மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடந்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அடுத்த வாரம் அறிவிக்கும் என்று தெரிந்தது.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கொண்டாட்டத்துக்கு பிறகு தேர்தல் நடத்தப்படலாம். நவம்பர் 2-வது அல்லது 3-வது வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2019-ம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே கட்டமாக அக்டோபர் 24-ந் தேதி நடைபெற்றது. ஜார்க்கண்டில் கடந்த முறை (2019) 5 கட்டங்களாக நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை நடைபெற்றது. சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதனால் ஜார்க்கண்டில் இந்த தடவை வாக்குப்பதிவை வேகமாக நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளது.

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பாரதிய ஜனதா, அஜித்பவார் கூட்டணி ஆட்சியும் ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி ஆட்சியும் நடைபெற்று வருகின்றன.

இந்த 2 மாநில தேர்தலோடு 2 எம்.பி. தொகுதி மற்றும் சட்டசபை இடைத்தேர்தலும் நடத்தப்படுகிறது.

ராகுல் காந்தி 2 தொகுதியில் வெற்றி பெற்றதால் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. நூருல் இஸ்லாம் மரணம் அடைந்ததால் பாசிர்ஹாப் தொகுதி காலியாக உள்ளது. இதனால் இந்த 2 தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது.

மேலும் பல்வேறு மாநிலங்களில் 45-க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. அங்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அரியானாவில் பாரதிய ஜனதாவும், காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியும் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தன.

Tags:    

Similar News