இந்தியா

பண ஆசையால் பாசத்தை மறந்தார்- 4 வயது சிறுவனை ரூ.3 லட்சத்திற்கு விற்ற தந்தை

Published On 2023-05-31 04:09 GMT   |   Update On 2023-05-31 04:09 GMT
  • மனைவிக்கு தெரியாமல் சிறுவனை ஐதராபாத் அழைத்துச் சென்றார்.
  • ஐதராபாத் தம்பதியிடம் மீதம் ரூ.1.50 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு மகனை அவர்களிடம்டம் விற்பனை செய்துவிட்டு வந்து விட்டார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள கரிமாபாத் பகுதியை சேர்ந்தவர் ஷேக் மசூத். தெருவில் சீசனுக்கு ஏற்றபடி தின்பண்டங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறார்.

இவரது மனைவி கவுசர். தம்பதிக்கு 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். 2-வது மகன் அயன் (வயது 4). வியாபாரத்தில் போதிய வருமானம் இல்லாததால் மசூத் குடும்பம் நடத்த முடியாமல் தவித்தார்.

அவருக்கு 4 பிள்ளைகள் இருப்பதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த 3 பெண்கள் குழந்தை விற்பனை செய்தால் அதிக பணம் கிடைக்கும் என மசூத்திடம் ஆசை வார்த்தை கூறினர்.

ஐதராபாத்தைச் சேர்ந்த தம்பதி குழந்தை இல்லாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு ஆண் குழந்தை தேவைப்படுகிறது.

குழந்தைக்கு ரூ.3 லட்சம் வரை பணம் கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர். பண ஆசையில் பாசத்தை மறந்த மசூத் தனது 4 வயது மகன் அயனை விற்பனை செய்ய முடிவு செய்தார். மேலும் ரூ.1.50 லட்சம் முன்பணமாக பெற்றுக் கொண்டார்.

மனைவிக்கு தெரியாமல் சிறுவனை ஐதராபாத் அழைத்துச் சென்றார். ஐதராபாத் தம்பதியிடம் மீதம் ரூ.1.50 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு மகனை அவர்களிடம்டம் விற்பனை செய்துவிட்டு வந்து விட்டார்.

தனது மனைவியிடம் சிறுவன் காணாமல் போய்விட்டதாக கூறி நாடகம் ஆடினார். இதனால் அதிர்ச்சி அடைந்து அவரது மனைவி அழுது துடித்தார்.

இதுகுறித்து மட்வாடா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பல்வேறு இடங்களில் சிறுவனை தேடினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அப்போது சிறுவன் கடைசியாக அவரது தந்தையுடன் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து மசூத்தை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் குடும்ப வறுமையின் காரணமாக பணத்திற்கு ஆசைப்பட்டு சிறுவனை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் ஐதராபாத் சென்றனர். விற்பனை செய்யப்பட்ட சிறுவனை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுவன் விற்பனைக்கு உடந்தையாக இருந்த 3 பெண்களை கைது செய்தனர். அவர்களிடம் மேலும் சிறுவர்கள் விற்பனை செய்யப்பட்டார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News