சட்டமன்றத்தில் சந்திரபாபு நாயுடு கேட்ட ஒரே கேள்வி.. மொத்தமாக எழுந்து நின்ற 160 எம்.எல்.ஏக்கள்..
- ஆந்திர சட்டமன்றத்தில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
- ஆளும் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்களில் 80 சதவீதம் பேர் கும்பலாக எழுந்து நின்றனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுடன் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியிடம் ஆட்சியிலிருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், அதனுடன் கூட்டணியில் உள்ள நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி 21 இடங்களிலும் வென்றது. ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 11 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. மீதம் உள்ள 8 இடங்களில் பாஜக வென்றது.
இதற்கிடையில் நாடாளுமன்றத் தேர்தலிலும் தெலுங்கு தேசம் ஜன சேனா கட்சிகள் கணிசமான இடங்களில் வென்ற நிலையில் அவை இடம்பெற்றுள்ள பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கவும் முக்கிய காரணியாகச் செயல்பட்டது.
மேலும் சட்டமன்றத் தேர்தலின் வெற்றியைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். துணை முதல்வராகப் பவன் கல்யாண் பதவி ஏற்றார். இந்நிலையில் சந்திரபாபு நாயுடு தங்களின் ஓ.எஸ்.ஆர் கட்சியைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருவதாக ஜெகன் மோகன் ரெட்டி குற்றம் சாட்டி வருகிறார். இந்த நிலையில் தான் நேற்று முன் தினம் நடந்த ஆந்திர சட்டமன்றத்தில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்களை நோக்கி பேசிய சந்திரபாபு நாயுடு, யார் மீதெல்லாம் ஜெகன் மோகன் ஆட்சியில் பொய் வழக்குகள் பதியப்பட்டதோ அவர்கள் கொஞ்சம் எழுந்து நில்லுங்கள் என்று சொல்லவே ஆளும் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்களில் 80 சதவீதம் பேர் [160 எம்எல்ஏக்கள்] கும்பலாக எழுந்து நின்றனர். இதில் துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் பல்வேறு அமைச்சர்களும் அடங்குவர்.
எம்.எல்.ஏக்கள் கூண்டோடு எழுந்துநின்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பின்னர் சபாநாயகரைப் பார்த்துப் பேசிய சந்திரபாபு நாயுடு, பார்த்தீர்களா, இத்தனை போரையும் ஜெகன் சிறைக்கு அனுப்ப முயன்றார் ஆனால் இவர்கள் அனைவரையும் மக்கள் நேராகச் சட்டமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர் என்று தெரிவித்தார். போலீசை வைத்து ஜனநாயகத்தின் வேர்களையே ஒய்.எஸ்.ஆர் தாக்கியுள்ளது. மாநிலத்தையே கஜானாவையே ஜெகன்மோகன் திவாலாகியுள்ளார் என்று சாடினார்.
முன்னதாக கடந்த வருடம் சந்திரபாபு நாயுடுவும் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது இவ்வாறிருக்க ஜெகன் மோகன் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு குறித்த வெள்ளை அறிக்கையை சந்திரபாபு நாயுடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.