இந்தியா (National)

கபிலத்தீர்த்தம் நீர் வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை காணலாம்.

திருப்பதி கபிலத்தீர்த்தம் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

Published On 2022-12-12 03:15 GMT   |   Update On 2022-12-12 03:33 GMT
  • சேஷாசலம் மலைத்தொடரில் பெய்த பலத்த மழையால் திருமலையில் உள்ள கோகர்பம், பாபவிநாசனம், ஆகாசகங்கை, குமாரதாரா, பசுபுதாரா அணைகளில் நீர் நிரம்பி காணப்படுகிறது.
  • திருமலை-திருப்பதி மலைப்பாதையில் 21, 26, 37, 38 ஆகிய கொண்டை ஊசி வளைவுகளில் சிறிய அளவில் அருவிகள் உருவாகி சீராக தண்ணீர் கொட்டுகிறது.

திருப்பதி:

மாண்டஸ் புயல் தாக்கத்தால் திருப்பதி, திருமலையில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. அதில் திருப்பதியில் 200 மில்லி மீட்டர் மழையும், திருமலையில் 210 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. சேஷாசலம் மலைத்தொடரில் பெய்த பலத்த மழையால் திருமலையில் உள்ள கோகர்பம், பாபவிநாசனம், ஆகாசகங்கை, குமாரதாரா, பசுபுதாரா அணைகளில் நீர் நிரம்பி காணப்படுகிறது.

சேஷாசலம் வனப்பகுதியில் பெய்த மழையால் கபில தீர்த்தம் நீர்வீழ்ச்சி, மல்லவாடி குண்டம் நீர்வீழ்ச்சிகளில் செம்மண் நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கபிலத்தீர்த்தம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தீர்த்தம் அருகில் செல்ல ேவண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பதி முதலாவது மலைப்பாதை மற்றும் 2-வது மலைப்பாதையில் பகல் நேரத்திலும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மாலை, இரவில் பனிமூட்டமும் உள்ளது. இரு மலைப்பாதைகள் ஓரம் பல்வேறு இடங்களில் காட்டருவிகள் உருவாகி அதில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருமலை-திருப்பதி மலைப்பாதையில் 21, 26, 37, 38 ஆகிய கொண்டை ஊசி வளைவுகளில் சிறிய அளவில் அருவிகள் உருவாகி சீராக தண்ணீர் கொட்டுகிறது. அலிபிரி நடைபாதையில் பாதயாத்திரையாக திருமலைக்கு செல்லும் பக்தர்கள் இயற்கை அழகை தங்களின் செல்போன்கள், கேமராக்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News